மின்சாரத்துறையில் புதிய மைல்கல் : அதிநவீன பேட்டரி கட்டமைப்புகள் கொழும்பு வந்தடைந்தன!

இலங்கையின் மின்சாரத் துறையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் எரிசக்தி மாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, 160 மெகாவாட் திறன் கொண்ட பேட்டரி மின் சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவும் திட்டத்தின் கீழ், வின்டிஃபோர்ஸ்  நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட ஆறு பேட்டரி கட்டமைப்புகள் அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம், அரசாங்கம் 160 மெகாவாட் திறன் கொண்ட 16 பேட்டரி மின் சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவுவதற்காக சர்வதேச ரீதியில் போட்டித்தன்மை வாய்ந்த கேள்விப்பத்திரங்களை கோரியிருந்தது. இதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களிடம் இந்த திட்டங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இந்த புதிய திட்டம் குறித்து சனிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வின்டிஃபோர்ஸ் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி சுதத் சந்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் இந்த பேட்டரி மின் சேமிப்பு கட்டமைப்புகள், நாட்டின் மின்சார விநியோகத்தை ஸ்திரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஆறு கட்டமைப்புகளும் மாஹோ, வவுனியா, சுன்னாகம், கிளிநொச்சி, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் உள்ள மின்சார பரிமாற்ற உப நிலையங்களுக்கு அருகில் நிறுவப்படவுள்ளன.

இதில் ஒரு கட்டமைப்பானது பகல் நேரத்தில் 40 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்கும் திறன் கொண்டது. மின்சாரத் தேவை மிக அதிகமாக இருக்கும் இரவு நேரங்களில், ஒவ்வொரு கட்டமைப்பிலிருந்தும் தலா 10 மெகாவாட் வீதம், ஆறு கட்டமைப்புகளிலிருந்து மொத்தமாக 60 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்சார கட்டமைப்புக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி மின் சேமிப்பு கட்டமைப்புகளின் கட்டுப்பாடு மற்றும் முகாமைத்துவமானது மின்சக்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கட்டமைப்பு இயக்கும்  நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் அதேவேளை, பராமரிப்புப் பணிகள் அந்தந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.

தற்போது எரிபொருள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது ஒரு அலகுக்கு 115 ரூபாய் செலவாகிறது. ஆனால், இந்த பேட்டரி மின் சேமிப்பு கட்டமைப்புகள் மூலம் உற்பத்தி செய்யும்போது 30 ரூபாய் மட்டுமே செலவாகும். இந்த அனுகூலத்தை எதிர்காலத்தில் மின் நுகர்வோருக்கு வழங்க முடியும். அத்துடன், எரிபொருள் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக மாதாந்தம் செலவிடப்படும் 2.6 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணியையும் இதனால் சேமிக்க முடியும்.

உலகளாவிய காலநிலை மாற்றங்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக தேசிய மின்சார விநியோகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு, இந்த மலிவான மற்றும் ஸ்திரமான தொழில்நுட்பம் ஒரு தீர்வாக அமையும். மேலும், இந்த கட்டமைப்புகள் கார்பன் வெளியேற்றத்தையோ அல்லது காற்று மாசுபாட்டையோ ஏற்படுத்தாததால், சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.

சீனா தனது மின் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பகுதியை இந்த பேட்டரி மின் சேமிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே மேற்கொள்கிறது. அதேபோல், ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் இந்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன. இத்தகைய ஸ்திரமான எரிசக்தி கட்டமைப்பை உருவாக்குவது, நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.