“தியாக தீபம்” திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்!

“தியாக தீபம்” திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் (26) பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.

பருத்தித்துறை

திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல்  பருத்தித்துறையில் உள்ள அவரது நினைவாலயத்தில் இன்று காலை 8 மணி முதல் அடையாள உண்ணாவிரதத்துடன் வடமராட்சி மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தியாகி திலீபனின் திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் சைவ மதகுருக்கள், பருத்தித்துறை மௌலவி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு தியாகி திலீபனுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

திருகோணமலை

தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவேந்தல் இன்று திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் நடைபெற்றது. இதனை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்தனர்.

உணர்வுபூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, அஹிம்சை வழியில் போராடிய “தியாக தீபம்” திலீபன் அவர்கள் ஈழ மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை துறந்தார்.

 

 

அவர் 23 வயதில் மருத்துவ மாணவனாக இருந்தபோது அப்போதைய காலத்தில் சிங்கள பேரினவாத காலணித்துவர்களால் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது.

 

 

இந்நிலையில், ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டபோது அரசாங்கம் ஊர்காவல் படையினருக்கு ஆயுதங்களை வழங்கியிருந்தனர். இந்திய மகாத்மா காந்தி போன்று அஹிம்சை வழியில் போராடியபோது நிராயுதபாணியாக செயற்பட்டு மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவரே தியாக தீபம் திலீபன்.

அவசரகால சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோருதல், வீதியோர இரானுவ முகாம்களை அகற்றல்  போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஈழ மக்களுக்காக உண்ணாவிரதம் இருந்தபோது 1987இல் புரட்டாதி மாதம் 26 அன்று உயிர் துறந்தார்.

ஐக்கிய நாடுகள் பேரவையின் ஜெனீவா மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் கூறியதாவது உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வினை வழங்குவோம் என்று. ஆனாலும் உள்ளக பொறி முறை மீது நம்பிக்கை இல்லை. சுயாதீனமான சர்வதேச பொறிமுறை ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என இந்த தருணத்தில் கோரிக்கை விடுக்கிறோம் எனத் தெரிவித்தார்.

கொழும்பு 

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கொழும்பில் தியாக தீபம் திலீபனுக்கு இன்று இறுதிநாள் அஞ்சலியினை செலுத்தினார்.

குறிப்பாக, தற்போது செப்டெம்பர் மாதத்திற்கான இரண்டாவது மாதாந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன. ஆகவே குறித்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ரவிகரன் கொழும்பில் தங்கியுள்ளார்.

இந்நிலையிலேயே அவரால் கொழும்பில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நினைவேந்தலின்போது ரவிகரன் திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி, மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.

மன்னார்

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “தியாக தீபம்” திலீபனின் 38ஆவது நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்று (26) காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது திலீபனின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் உள்ளடங்கலாக பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த “தியாக தீபம்” திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 10.30 மணியளவில் மன்னார் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில்  நடைபெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் “தியாக தீபம்” திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நினைவு உரைகள் இடம்பெற்றன.

 

இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை பிரதிநிதிகள், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

 

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 

“தியாக தீபம்” திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (26) காலை புதுக்குடியிருப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத் தலைவர் நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் தங்களது கடைகளை மூடி, திலீபனுக்கான அஞ்சலி மரியாதையினை செலுத்தியிருந்தனர்.

நினைவேந்தல் நிகழ்வின்போது பொதுச்சுடரினை சட்டத்தரணி தனஞ்சயன் ஏற்றிவைக்க, தொடர்ந்து திலீபனின் திருவுருவப்படத்திற்கு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். அத்துடன், நினைவுரையும் நடத்தப்பட்டது.

 

மட்டக்களப்பு 

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம்  வெள்ளிக்கிழமை (26) மட்டக்களப்பு மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டுக் கழக மைதானத்தில் தாயக செயலணியின் அனுசரணையில், மாவடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.பிரிநட் குணபாலனின் தலைமையில் நடைபெற்றது.

தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், மாவீரர் சிறிநந்தியின் தாயாரான நல்லரெட்ணம் பவளமலரால் இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திலீபனின் திருவுருவப்படத்துக்கு முன்னாள் போராளி ஒருவர் மலர்மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து பலரும்  உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

இந்நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இ.ஸ்ரீநாத், ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், தாயக செயலணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.