திறைசேரி செயலாளர் கூறும் சாக்குப்போக்கு ஏற்றுக்கொள்ள முடியாது!

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுவார், அதன் பிறகு தான் வர முடியும் என்றும்  திறைசேரி செயலாளர் கூறும் சாக்குப்போக்கு ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் குழுவின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒருவேளை அவர் மீது தவறாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தால், உண்மையை நிலைநாட்டி  குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதற்கு  அவருக்கு இது ஒரு வாய்ப்பாகும். ஆனால் அவர் ஏன் தப்பியோடுகிறார்? எதை மறைக்கப் பார்க்கிறார்?  என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

பதவியில் இருக்கும் திறைசேரி செயலாளர் என்ற ரீதியில் அவருக்கு ஒரு பொறுப்பு உள்ளது. அவர் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், அதைச் செய்யக்கூடிய ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும்  ஹர்ஷ டி சில்வா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாக முடியாது என திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும அறிவித்துள்ளமை குறித்து மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இன்று  நடைபெறவுள்ள அரச நிதி பற்றிய தெரிவுக்குழுவின் ( கூட்டத்தில் முன்னிலையாகி  மோசடி செய்யப்பட்ட  2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட முடியாது என்று திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியபெரும எழுத்துமூலமாக அறிவித்துள்ளதை  ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியலமைப்பின் பிரகாரம்,  நாட்டின் பொது நிதி மீதான முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உண்டு. நிலையியற் கட்டளைகளின்படி, கடன் செலுத்துகை உள்ளிட்ட பல முக்கியமான விடயங்களை மேற்பார்வையிடும் நேரடிப் பொறுப்பு  அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு உண்டு. திறைசேரியின் செயலாளர்   அழைக்கப்படுவது என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல,மாறாக அது அக்குழுவின் அரசியலமைப்பு ரீதியான கடமையாகும்.

அவர் குழுவின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒருவேளை அவர் மீது தவறாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தால், உண்மையை நிலைநாட்டி  குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதற்கு  அவருக்கு இது ஒரு வாய்ப்பாகும். ஆனால் அவர் ஏன் தப்பியோடுகிறார்? எதை மறைக்கப் பார்க்கிறார்?

பதவியில் இருக்கும் திறைசேரி செயலாளர் என்ற ரீதியில் அவருக்கு ஒரு பொறுப்பு உள்ளது. அவர் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், அதைச் செய்யக்கூடிய ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். இது அவருக்கு தனிப்பட்ட ரீதியிலும் முக்கியமானது. ஏனெனில் இந்த முக்கியமான சிவில் சேவைப் பதவியை வகிக்கும் முதலாவது அரசியல்வாதி இவராவார். இந்த நியமனத்திற்கு முன்னர் இவர் அரசாங்கத்தின் பாராளுமன்ற  உறுப்பினராகவும், எமது குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

திறைசேரி செயலாளரின் இந்தத் தன்னிச்சையான செயல், பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய காலத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் பாராளுமன்றத்தின்  அதிகார முறையை முற்றிலும் மதிக்காத தன்மையைக் காட்டுகிறது. அதனால்தான், 2022 பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு அரசாங்க நிதி பற்றியக் குழுவின் தலைமைப்பொறுப்பு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டது. மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ, அந்த ‘முறைமை மாற்றத்திற்கு’  விடுக்கப்பட்ட சவாலாகவே இது அமைகிறது.

மேலும், இது ஆளுகை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் செயலாகும். அடுத்த வாரம் ஜனாதிபதி  பாராளுமன்றத்தில்  உரையாற்றுவார் என்றும், அதன் பிறகு தான் வர முடியும் என்றும்  திறைசேரி செயலாளர் கூறும் சாக்குப்போக்கு ஏற்றுக்கொள்ள முடியாது.