பகிடிவதையால் பல்கலை மாணவன் உயிரிழப்பு : 10 மாணவர்களும் பிணையில் விடுதலை!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதையினால் மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 மாணவர்களையும் பிணையில் விடுதலை செய்யுமாறு இரத்தினபுரி மேலதிக நீதவான் ஏ.ஜீ.யு.எஸ்.என். ஏ செனவிரத்ன நேற்று புதன்கிழமை (02) உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 மாணவர்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த  23 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர்களான 10 மாணவர்களும் தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்க பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 10 மாணவர்களுக்கும் எதிராக நீதிமன்றினால் வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த 10 மாணவர்களும் ஒவ்வொரு வார இறுதியும் காலை 09 மணி முதல் 12 மணிக்கிடையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.