பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களின் பதவி காலத்தை அதிகரிப்பது இலஞ்சம் வழங்கும் ஒரு செயற்பாடாடு!

பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களின் பதவி காலத்தை அதிகரிப்பது இலஞ்சம் வழங்கும் ஒரு செயற்பாடாகவே கருதப்படும். இந்த முறையற்ற செயற்பாட்டை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதியரசர்களின் பதவி காலத்தை மாத்திரம் அதிகரிப்பது கீழ் நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு இழைக்கும் பாரியதொரு அநீதியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நீதித்துறையின் இன்றைய நிலைமை கவலைக்குரியது. பிரதம நீதியரசரின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் சேவை ஓய்வு காலத்தை 65 வயதாகவும், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் சேவை ஓய்வுக் காலத்தை 67 வயதாகவும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான சட்ட வரைவை சட்ட வரைஞர் திணைக்களம் தற்போது தயாரித்து வருகிறது.

பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களின் பதவி காலத்தை அதிகரிப்பது இலஞ்சம் வழங்கும் ஒரு செயற்பாடாகவே கருதப்படும். இந்த முறையற்ற செயற்பாட்டை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்  என்று கேட்டுக்கொள்கிறோம். உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதியரசர்களின் பதவி காலத்தை மாத்திரம் அதிகரிப்பது கீழ் நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு இழைக்கும் பாரியதொரு அநீதியாகும்.

நீதிமன்றங்களின்  செயற்பாடுகளுக்கும், வழக்கு  நடவடிக்கைகளுக்கும் அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் தான் அரசாங்கம் செயற்படுகிறது. பிரதம  நீதியரசர்   தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தற்போது காணொளி ஒன்று பரிமாற்றப்படுகிறது.

நீதித்துறையை பாதுகாப்பதற்கு ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் ஒன்றிணைந்து குரல் கொடுக்க  வேண்டும். முன்னாள் பிரதம நீதியரசர்  சிரானி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்கு அப்போதைய அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு ஆளும் தரப்பில் இருந்துக் கொண்டு காலஞ்சென்ற திஸ்ஸ விதாரன  கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். எதிராக வாக்களித்தார். ஆகவே திஸ்ஸ விதாரனவை போன்று தற்றுணிவுடன் செயற்பட வேண்டும் என்று ஆளும் தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

நீதித்துறையின் மீது கை வைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். 40 இற்கும் அதிகமான நீதிபதிகள் சேவையில் இருந்து தற்போது  நீக்கப்பட்டுள்ளார்கள். எம்மை காட்டிலும் சிறந்த அரசாங்கத்தை சுட்டிக்காட்டுமாறு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டார்கள்.ஆனால் தற்போது இதுபோன்ற அரசாங்கம் எங்கும் இல்லை என்றே குறிப்பிட வேண்டியுள்ளது என்றார்.