மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இணைந்து இன்று (22) புதன்கிழமை பிரதேச மட்டத்தில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, மட்டக்களப்பு மேற்கு, ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விசாரணை மற்றும் வாக்குமூலங்கள் வழங்கும் நடவடிக்கைகளை காணாமல்போனார் அலுவலக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளும் நீதியமைச்சின் சட்டத்தரணிகளும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இந்த விசாரணை நடவடிக்கைகளையும் வாக்குமூலம் பதிவுசெய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுத்தனர்.
காணாமல் போனோர் அலுவலகத்திற்கு காணாமல் போனோர் தொடர்பாக அவர்களது உறவுகளினால் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய அவர்களின் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள காணாமல் போனோரின் உறவினர்களிடம் சாட்சியங்கள் பெறும் நடவடிக்கைகள் நடைபெற்றது.
இன்றையதினம் சாட்சியங்கள் பெறப்பட்டு மறுமலர்ச்சி உதவி வழங்குவதாகவும் மரண பதிவும் வழங்குவதாக காணாமல் போனோர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டதாக முறைப்பாடுகளை வழங்கியோர் தெரிவித்தனர்.
இதேநேரம் நேற்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள அலுவலகம்,பட்டிப்பளை பிரதேச செயலகம்,வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுகளில் கிடைக்கப்பெற்ற 295 முறைப்பாடுகளில் 233 விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் 144 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவற்றில் 116 முறைப்பாடுகள் விசாரணைசெய்யப்பட்டுள்ளதுடன், வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் 78 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் 64 முறைப்பாடுகள் விசாரணைசெய்யப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு அலுவலகத்தில் 73 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் 53 விசாரணைசெய்யப்பட்டு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.




