மட்டு. பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னால் மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னால் பெற்றோர்கள், பாடசாலை நலன் சார்ந்த அமைப்புக்கள் இணைந்து திங்கட்கிழமை (1) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் – ஆசிரியர்களிடையே நிலவும் பிரச்சினை காரணமாக மாணவர்களின் கல்விச் செயற்பாடு கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக உரிய கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு  தெரியப்படுத்தியதாகவும் அவர்கள், இப்பிரச்சினைக்கு குறிப்பிட்ட காலத்தில்  தீர்வு வழங்குவதாக வாக்குறுதி அளித்தபோதிலும், இதுவரை எந்தத் தீர்வும் எடுக்கப்படவில்லை என்றும் அதனால் இன்று மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கணித பாடத்திற்கான ஆசிரியரை பதில் ஆசிரியர் இன்றி இடமாற்றம் செய்துள்ளதால் மாணவர்கள் கணித பாட செயற்பாடுகளில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த இடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின்  மாவட்ட இணைப்பாளர் திலகநாதன் சென்று, பிரச்சினைகளை ஆராய்ந்து, பின்னர், மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்திற்குச் சென்று, வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் அதிபர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதோடு, மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படாதவாறு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்