வலுசக்தி நெருக்கடி மக்களுக்கு சுமையாக அமையாத வகையில் முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளது – ஹரிணி அமரசூரிய

ஏனைய நாடுகளைப் போலன்றி,  வலுசக்தி நெருக்கடியானது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முகாமைத்துவம் செய்யப்பட்டு, மக்களுக்குப் பாரமாக அமையாமல் அதற்கான செலவை அரசாங்கமே ஏற்றுக்கொண்டு நிலையான முகாமைத்துவச் செயல்முறையைப் பின்பற்றியுள்ளது. எவ்வாறாயினும், இந்த நெருக்கடி இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என  பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில்  வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற, அரச சேவையை முறையாகப் பேணுவது தொடர்பில் அமைக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டத்தில் உரையாற்றும் போது பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிலையான வலுசக்தி முகாமைத்துவம் மற்றும் அதற்காக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அரச நிறுவனங்களுக்குள் எரிசக்தியைச் சேமிப்பதற்காக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வலுசக்தி முகாமையாளர்  ஒருவரை நியமிப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆதாரங்களை நோக்கி நகர்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. மேலும், க்ளீன் ஸ்ரீ லங்கா  தேசிய திட்டத்தின் கீழ், அரச கட்டடங்களை பசுமை கட்டடக் கோட்பாட்டிற்கு  ஏற்ப அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் எரிபொருள் சலுகைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும், இதுவரையில் நடைமுறையிலிருந்த ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறையை நீக்கி, கோட்டா குறியீட்டின் கீழ் எரிபொருளை வழங்குதல் மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டை  அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவையானது ஏற்கனவே கோரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

மின்சாரப் பயன்பாட்டை நிலையான முறையில் முகாமைத்துவம் செய்யும் நோக்கில், க்ளீன் ஸ்ரீ லங்கா, திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மின்சாரப் பயன்பாட்டைச் சீராக முகாமைத்துவம் செய்யும் வீடுகளைத் தெரிவு செய்து மாணவர்கள் ஊடாக மதிப்பீடு செய்யும் திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் மாணவர்கள் ஊடாக எரிசக்தி சேமிப்பு முறைகளை சமூகத்திற்குக் கொண்டு செல்லுதல் போன்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.எதிர்கால நிர்மாணப் பணிகளில் பசுமை கட்டடக் கோட்பாட்டை  அறிமுகப்படுத்துவது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

அரசாங்கம் எரிசக்தி துறையைச் சரியாக முகாமைத்துவம் செய்ததன் காரணமாகஇ நிலவும் நெருக்கடி குறித்து மக்கள் அதிகளவில் கவலை கொள்ள வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஏனைய நாடுகளில் எரிபொருள் வரிசைகள் மற்றும் மின்வெட்டுகள் நிலவுகின்றன. ஆனால் நாம் அந்த நெருக்கடியைச் சரியாகக் கையாண்டோம். எனினும், நெருக்கடி இன்னும் தீரவில்லை என்பதால் நாம் தொடர்ச்சியாக அவதானத்துடன் இருக்க வேண்டும். நிலையான எரிசக்தி முகாமைத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டும். அத்துடன், வெசாக் வாரத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும்’ என்றும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.