வங்கிப் பங்காளர்களுடன் இணைந்து இலங்கையின் டிஜிட்டல் பயணத்தை முன்னெடுக்க எதிர்பார்ப்பு

இலங்கையின் பரந்த டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில் எங்களது வங்கிப் பங்காளர்களுடன் இணைந்து இப்பயணத்தை தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்  என  PayPal   நிறுவனத்தின் சர்வதேச எல்லைகடந்த வர்த்தகத்திற்கான சிரேஷ்ட துணைத் தலைவரும், ஆசிய பசுபிக் பிராந்திய பொது முகாமையாளருமான நாதியா சயீத்  தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,  இலங்கையில் paypal  மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்தும் நிகழ்வு   நேற்று  கொழும்பு கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. அங்கு விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இந்த முக்கிய தருணத்தின் ஒரு அங்கமாக இருப்பதையிட்டு நாங்கள் பெருமையடைவதோடு, இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான ஒரு பொதுவான இலக்கை நோக்கி அரச மற்றும் தனியார் துறை பங்காளர்களை ஒன்றிணைக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இலங்கை அரசாங்கத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

PayPal  நிறுவனமாக எங்களது நோக்கம் எப்போதும் சிறு வணிகங்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் ஆகியோர் உலகளாவிய பொருளாதாரத்தை அணுகுவதற்கான சக்தியை வழங்குவதாகும். 200க்கும் மேற்பட்ட சந்தைகளில் 439 மில்லியன் செயலில் உள்ள கணக்குகளுடன், வர்த்தக நடவடிக்கைகளை மிகவும் எளிமையானதாக, பாதுகாப்பானதாக மற்றும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

உலகெங்கிலும் உள்ள நுகர்வோருக்கு ஏற்கனவே சேவைகளை வழங்கி வரும், வலுவான மற்றும் திறமையான சுயாதீன தொழில் வல்லுநர்கள்,தொழில்முனைவோர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆரம்பக்கட்ட வர்த்தக  சமூகத்தை இலங்கை கொண்டுள்ளதை நாங்கள் காண்கிறோம்.

அவர்களின் திறன்கள் உலகளாவிய ரீதியிலானவை, அதேபோல் அவர்களுக்கான வாய்ப்புகளும் பரந்தவை. இலங்கை வங்கி , கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கையில் உள்ள  PayPal    பயனாளிகள் மற்றும் வர்த்தகங்களுக்கு மிகவும் எளிதாக அணுகக்கூடிய எல்லைகடந்த கட்டணச் சேவையை  வழங்குவதற்கான ஒரு முக்கிய படியை நாங்கள் எடுத்து வருகிறோம்.

இலங்கையின் பரந்த டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில் எங்களது வங்கிப் பங்காளர்களுடன் இணைந்து இப்பயணத்தை தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்  என்றார்.