2022ஆம் ஆண்டு முதன்மை பணவீக்கம் 70 சதவீதமாக காணப்பட்டபோது சவால்களை ஏற்காமல் தப்பிச் சென்றவர்கள் தற்போது பணவீக்கம் 2 சதவீதமாக குறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி, அரசாங்கம் என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஜனாதிபதி என்ன செய்தார் என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள். மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடாது என்பதற்காகவே பொருளாதார நிலைமாற்றம், அரச நிதி முகாமைத்துவ சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற அமர்வில் அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம், பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் என்பனவற்றை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
சர்வதேச பொருளாதார கொள்கைகளுக்கு அமையவே பொருளாதார நிலைமாற்றம் மற்றும் பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டமூலங்கள் தொடர்பில் அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா முன்வைக்கும் திருத்தங்கள் மற்றும் யோசனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வோம்.
2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மீண்டும் தோற்றம் பெறக்கூடாது என்பதற்காகவே இவ்விரு சட்டமூலங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் எவ்வித அரசியல் நோக்கங்களும் கிடையாது. இந்த சட்டமூலங்களை எதிரணியினர் ஏன் வெறுக்கிறார்கள் என்பதை அறியவில்லை.
2032ஆம் ஆண்டு கடன் பெறும் வரையறையை 95 சதவீதமாக குறைத்துக்கொள்வது 2030ஆம் ஆண்டில் பண்டங்களின் ஏற்றுமதிகள் அல்லது சேவைகளின் ஏற்றுமதிகளில் இருக்கவேண்டிய தேசிய வெளிநாட்டு நேரடி முதலீட்டின் ஆகக் குறைந்தது 40 சதவீதத்தை அண்மித்ததாக இருத்தல் வேண்டும்.
அத்துடன் 2032ஆம் ஆண்டு வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதத்தை அடைவதற்கு அரசாங்க வரவு செலவுத் திட்டத்தில் ஆரம்ப மிகுதி மற்றும் 2032ஆம் ஆண்டு முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆகக் குறைந்தது 2 சதவீதத்தை அடைதல் வேண்டும்.
அத்துடன் 2027ஆம் ஆண்டுக்கு அப்பால் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் அரசாங்க வருமானமானது ஆகக் குறைந்தது 15 சதவீதத்தை கொண்டதாகவும், பல்பரிமாண வறுமையானது 2027ஆம் ஆண்டில் 15 சதவீதத்தை விட குறைவாகவும், 2035ஆம் ஆண்டில் 10 சதவீதத்தை விட குறைவானதாகவும் இருத்தல் வேண்டும் என்பன இச்சட்டமூலங்களின் பிரதான இலக்காகும்.
பொருளாதார நிலைமாற்றம் அரசாங்கத்துக்கு சொந்தமான கடனை மீள கட்டமைத்தலை தேசிய கொள்கையாக கொண்டுள்ளது.
2032ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் பொதுக் கடனானது 95 சதவீதத்தைக் காட்டிலும் குறைவாக இருத்த வேண்டும்.
2032ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் மத்திய அரசாங்கத்தின் ஆண்டு கடன் சேவையானது வெளிநாட்டு நாணயத்தில் 4.5 சதவீதத்தை விட குறைவாக இருத்த வேண்டும். போட்டித் தன்மையை அதிகரிக்கும் வகையில் தேசிய பொருளாதாரத்துக்கு பல்வகைமை மற்றும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தல் வேண்டும்.
2050ஆம் ஆண்டில் ஏற்றுமதி மைய எண்ணிக்கை பொருளாதாரம் தேசிய பூச்சியத்தை அடைதல், பூகோள பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்புக்களை அதிகரித்தல், உறுதியான நுண்பொருளியல் சமநிலைகள் மற்றும் நிலைபேறான கடன் ஆகியவற்றை அடைதல் விவசாய, உற்பத்தித்திறன், விவசாய வருமானங்கள், கமத் தொழில் ஏற்றுமதிகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு விவசாயத்துறையை நவீனமயப்படுத்தல் பிரதான இலக்குகளாக காணப்படுகின்றன.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால், ஏற்றுக்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஏற்றுமதி பொருளாதாரத்தை பிரதான அம்சமாக கொண்டு செயற்படாவிடின், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் வங்குரோத்து நிலையடைய நேரிடும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இவ்விரு சட்டமூலங்களிலும் ஏற்றுமதி பொருளாதாரத்தை இலக்காகக் கொண்ட திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி பொருளாதாரத்தின் ஊடாக வரி வருமானத்தை 15 சதவீதமாக அதிகரித்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார தாக்கத்தினால் 26 சதவீதமாக உயர்வடைந்துள்ள ஏழ்மையை 2027ஆம் ஆண்டு காலப்பகுதியில் 15 சதவீதமாகவும், 2035ஆம் ஆண்டு 10 சதவீதமாகவும் குறைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்காகவே வினைத்திறனான முறையில் அஸ்வெசும நலன்புரி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது.
16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை செயற்படுத்தவில்லை. இம்முறை வங்குரோத்துக்குப் பின்னர் 17ஆவது தடவையாக ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளோம். ஆகவே ஏற்றுக்கொண்ட செயற்றிட்டங்களை கட்டாயம் செயற்படுத்த வேண்டும்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்போம். ஆகவே அதிகாரத்தை எம்மிடம் தாருங்கள் என்று மக்களிடம் ஆணை கோரும் மக்கள் விடுதலை முன்னணியினர் நாணய சுத்திகரிப்பு ஊடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக குறிப்பிடுகிறார்கள்.
உலகில் எந்த நாடும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி அனுசரணை வழங்குவதையும், நாணய சுத்திகரிப்பில் ஈடுபடுவதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நிதி நடவடிக்கை பணிக்குழு 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையை அவதானத்துக்குரிய நாடு என்று அடையாளப்படுத்தியது.
நிதி சுத்திகரிப்பு ஊடாக பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யலாம் என்று மக்கள் விடுதலை முன்னணி கருதுமாயின் நாடு சர்வதேச மட்டத்தில் அவதானத்துக்குரியதாக்கப்படும். அத்துடன் சமூக கட்டமைப்பில் குற்றச் செயல்கள் தீவிரமடையும். எச்சந்தர்ப்பத்திலும் இலங்கை உட்பட எந்த நாடும் நாணய சுத்திகரிப்பில் ஈடுபடுவதற்கும், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கும் நிதி நடவடிக்கை பணிக்குழு இடமளிக்காது.
நாணய சுத்திகரிப்பின் ஊடாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணி நினைக்குமாயின் அல்லது அவர்களின் அரசாங்கத்தில் நிதி அமைச்சு பதவியை ஏற்கவுள்ள சுனில் அந்துனித்தி நாணய சுத்திகரிப்பை ஊக்குவிப்பாராயின், நிதி நடவடிக்கை பணிக்குழு இலங்கையை கறுப்பு பட்டியலில் சேர்க்கும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் பொருளாதார ரீதியில் 2022ஆம் ஆண்டை காட்டிலும் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.
2022ஆம் ஆண்டு முதன்மை பணவீக்கம் 70 சதவீதமாக காணப்பட்டபோது சவால்களை ஏற்காமல் தப்பிச் சென்றவர்கள் தற்போது பணவீக்கம் 2 சதவீதமாக குறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி, அரசாங்கம் என்ன செய்தது என்று கேள்வியெழுப்புகிறார்கள்.
ஜனாதிபதி என்ன செய்தார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என்றார்.