நான் ‘சாதி – மதமற்றவர்’ சான்றிதழ் பெற முனைந்தது ஏன்? – நடிகர் பார்த்திபன் விளக்கம்

நடிகர் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, “தேர்தல் சமயங்களில் சாதியின் அடிப்படையில்தான் வேட்பாளர்கள், கணக்கெடுப்பு என எல்லாமே. ஆனால், வரும் காலங்களில் சாதி இல்லாத ஒரு புதிய சமூகம் எப்படி இருக்கும்? இதுதான் எனது லட்சியம்” என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், ‘நான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதால் எனக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்க வேண்டும் என சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அவர் எனது விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக இன்று நடந்தது. அப்போது ‘நோ கேஸ்ட், நோ ரிலீஜியன்’ என வாசகம் பொறிக்கப்பட்ட சட்டை அணிந்து உயர் நீதிமன்றத்துக்கு வருகை தந்த நடிகர் பார்த்திபன், தனக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி வேண்டுகோள் விடுத்தார்.

அதையடுத்து நீதிபதி, ஏப்.29-ம் தேதிக்குள் மனுதாரரான பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்க சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். மேலும் பார்த்திபனின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்த நீதிபதி, அதிகாரிகள் சான்றிதழ் வழங்கியது தொடர்பான நகலை ஏப்.29 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பார்த்திபன் கூறும்போது, “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். எனக்கு சாதி, மதத்தின் மீது பெரிய ஈடுபாடு இல்லை. ஆனால், சிலருக்கு சாதி மீது வெறி இருக்கும். ஆனால், எனக்கு அத்தகைய உணர்வு இல்லை.

சமீபத்தில், ஹைதராபாத்தில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தவறுதலாக சொன்ன வார்த்தை மிகப் பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போதுதான் எனக்கு அழுகை வந்தது. பின்னர் அந்த அழுகையில் இருந்து அறிவு வந்தது. சாதி, மதம் இல்லை என ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும் என தோன்றியது. ஆனால் அது சுலபமாக கிடைப்பதாக தெரியவில்லை.

அதற்காக வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர்களிடம் நான் விண்ணப்பித்தேன். சாதி, மத பேதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய நாளாகவே இதனை நான் பார்க்கிறேன். இந்தச் சான்றிதழைப் பெறுவதில் பல போராட்டங்கள் இருந்த காரணத்தினால், இறுதியாக நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது நீதிமன்றத்தின் வாயிலாக எனக்கு ஒரு மகிழ்ச்சியான தீர்ப்பு கிடைத்துள்ளது. வரும் ஏப்ரல் 29-ம் தேதிக்குள் எனக்கு அச்சான்றிதழை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இடஒதுக்கீடு மூலம் கிடைக்கும் சலுகைகள் எனக்கோ, எனது பிள்ளைகளுக்கோ தேவையில்லை என நினைக்கிறேன். எங்களது உழைப்பின் மூலமே உயர்வடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தற்போது, தேர்தல் சமயங்களில் சாதியின் அடிப்படையில் தான் வேட்பாளர்கள், கணக்கெடுப்பு என எல்லாமே. ஆனால், வரும் காலங்களில் சாதி இல்லாத ஒரு புதிய சமூகம் எப்படி இருக்கும்? இதுதான் எனது லட்சியம்.

அடுத்த ஐந்தாண்டுகள் கழித்து தேர்தல் வரும்போது, மக்களுக்கு இவ்வளவு குறைகள் உள்ளன என்ற நிலையே இருக்கக் கூடாது. மக்கள் அனைத்துப் பிரச்சினைகளையும் வென்று முன்னேற வேண்டும் என்பதே எனது ஆசை” என்று நடிகர் பார்த்திபன் கூறினார்.