மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க பல்வேறு இடையூறுகளை செய்கின்றனர். மாநாட்டுக்கு அனுமதி மறுத்தால் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் மைதானத்தில் நாளை (ஜூன் 8) நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இந்த கூட்டத்துக்கான பந்தல்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரையில் நாளை நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு மதுரை வருகிறார். இரவு மதுரையில் தங்கும் அவர் நாளை காலை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்கிறார். மாலையில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
எம்ஜிஆர் மதுரையில்தான் முதல் கூட்டம் நடத்தினார். மதுரையில் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் வெற்றி பெறும். இது மீனாட்சி ஆட்சி செய்யும் இடம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். அதனால்தான் மதுரையில் கூட்டம் நடத்தப்படுகிறது.
பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இருக்கிறார். பாமகவும் வரும். தேமுதிக வருகையை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் சேர வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம்.
பாமக விவகாரத்தில் குருமூர்த்தியை வைத்து பாஜக சமரசம் செய்யவில்லை. அவரது முயற்சிக்கும், பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை. குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார். அவர் மக்கள் நலனை விரும்புபவர். மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க பல்வேறு இடையூறுகளை செய்கின்றனர்.
மாநாட்டுக்கு அனுமதி மறுத்தால் உயர் நீதிமன்றத்தை நாடுவோம். டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த சோதனையில் பங்கேற்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டது, வழக்கமான நடைமுறைதான். இவ்வாறு அவர் கூறினார்.