பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘பொறுப்புக்கூறல் செயற்றிட்டம்’ எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரில் மீள புதுப்பிக்கப்படவேண்டும். இசைப்பிரியா போன்ற பெண்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு அச்செயற்றிட்டம் தொடரவேண்டியது மிக அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாளைய தினத்துடன் (18) 16 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், அதனை முன்னிட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை அரசாங்கத்தினால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் தோற்கடிக்கப்பட்டு, நாட்டில் 26 வருடகாலம் நிலவிய யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாளைய தினத்துடன் (18) 16 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து நீண்டகாலம் கடந்திருக்கின்ற போதிலும், பாதிக்கப்பட்ட தமிழ் பெண்களின் நீதிக்கான போராட்டம் இன்னமும் தொடர்கிறது.

யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் எண்ணிலடங்கா மீறல்களில் ஈடுபட்டனர். யுத்தத்தின் இறுதி வாரங்களில் அரச படையினரால் பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பெண் போராளிகள் மற்றும் தமிழ் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டனர். இராணுவத்தினர் அதனை தமக்கான யுத்த வெற்றிக் கேடயங்களாகக் கருதி புகைப்படங்கள் எடுத்தும், ஒளிப்பதிவு செய்தும் வைத்திருந்தனர். அவற்றில் கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கக்கூடும் எனக் கருதக்கூடிய வகையில் சடலம் கண்டறியப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவின் புகைப்படமும் உள்ளடங்குகிறது.

இவ்வாறு அரச அனுசரணையுடன் தமிழர்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டன. யுத்தத்தின் பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் பெண்கள் மற்றும் ஆண்கள் பலர் பாதுகாப்புப் படையினரால் பாலியல் ரீதியிலான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இருப்பினும் இலங்கையில் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் பாலியல் ரீதியான வன்முறைகளிலும் சட்டவிரோத படுகொலைகள், சித்திரவதைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினரைப் பொறுப்புக்கூறச் செய்வதற்குத் தவறியிருக்கின்றன.

அதேவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மாகாணங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவமயமாக்கல் நடவடிக்கைகள், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளிகள் மீண்டும் பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படக்கூடிய அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ளது.

உண்மையையும், சர்வதேச நீதியையும் கோரி பல வருடகாலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் மற்றும் மனைவிமார் உள்ளிட்ட பெண்கள் அச்சுறுத்தல்களுக்கும், மீறல்களுக்கும், பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கும் முகங்கொடுத்துவருகின்றனர்.

இலங்கையில் குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதன் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளக நீதிப்பொறிமுறையில் நம்பிக்கை இழந்திருப்பதுடன் அந்நீதியை வேறு இடங்களில் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதேபோன்று சர்வதேச குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு சகல வடிவங்களிலுமான நீதி அதிகார வரம்பெல்லையைப் பயன்படுத்தவேண்டியது அவசியம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இவ்வாறானதொரு பின்னணியில் குற்றமிழைத்தோருக்கு எதிராக வழக்குத்தொடர்வதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கக்கூடிய ஆதாரங்களைத் திரட்டுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம்’ மாத்திரமே தற்போது எஞ்சியிருக்கின்ற ஒரேயொரு வழியாகும்.

அச்செயற்திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கூட்டத் தொடரில் புதுப்பிக்கப்படுவதுடன், அதனை இலங்கை அரசாங்கம் ஆதரிக்க வேண்டும். இசைப்பிரியா போன்ற பெண்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு அச்செயற்திட்டம் தொடரவேண்டியது மிக அவசியமாகும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.