பிரான்சில் கடந்த ஆண்டு (22.09.2023) உடல் நலக்குறைவால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் சந்திரராசா அகிலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பந்தன் பகுதியில் அவருடைய விதைகுழி முன்பாக நேற்று 22.09.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.30 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாட்டுப்பற்றாளர் அகிலன் அவர்களின் கல்லறை மீது மாவீரர் பணிமனையின் சார்பில் தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டது. பொதுச்சுடரினை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.நாகயோதீஸ்வரன் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் அகிலன் அவர்களின் துணைவியார் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
மலர்மாலையை நாட்டுப்பற்றாளர் அகிலன் அவர்களின் பிள்ளைகள் அணிவித்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.
நினைவுரைகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்களும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.நாகயோதீஸ்வரன் அவர்களும் லாக்கூர்னோவ் தமிழ்ச்சங்கம் சார்பில் ஆசிரியர் பரமானந்தன் அவர்களும் நாட்டுப்பற்றாளர் அகிலன் அவர்களோடான தமது அனுபவங்களையும் செயற்பாடுகளையும் பகிர்ந்துகொண்டிருந்தனர்.
இது அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்திருந்தது.
இந்நிகழ்வில் நாட்டுப்பற்றாளர் சந்திரராசா அகிலன் அவர்களின் குடும்பத்தினருடன், உறவினர்கள், அனைத்து கட்டமைப்புகளினதும் செயற்பாட்டாளர்கள், தமிழ்ச்சோலை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ்ச்சங்கங்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு தமது நினைவேந்தலைச் செய்திருத்தனர்.
இதேவேளை, நாட்டுப்பற்றாளர் சந்திரராசா அகிலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பாரிஸ் பகுதியில் அமைந்துள்ள தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்திலும் நேற்று (22.09.2024 ) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.