கே.பாக்யராஜ்: குடும்பங்கள் ரசித்துக் கொண்டாடிய திரைக்கதை மன்னாதி மன்னன்!

இயக்​குநர், நடிகர், சிறந்த திரைக்​கதை​யாசிரியர், இசை அமைப்பாளர், தயாரிப்​பாளர் என பன்​முகத் திறமை கொண்ட கே.பாக்​ய​ராஜின் எதிர்​பா​ராத மறைவு திரை​யுல​கில் பெரும் சோகத்தை ஏற்​படுத்​தி​யிருக்​கிறது.

தமிழ் சினி​மா​வில், ஒரு படத்​துக்கு அழகான ஹீரோ, ஹீரோ​யின், அசத்​தலான இசை உள்பட அனைத்​தும் முக்​கி​யம் என்று கருதப்பட்ட காலத்​தில் திரைக்​கதை​தான் ஒரு படத்​தின் உயிர் என்று அழுத்​த​மாக​த் தனது படங்​களின் மூலம் நிரூபித்​து, சாதித்துக் காட்​டிய​வர் கே.​பாக்​ய​ராஜ்.

பார​தி​ராஜா​விடம் உதவி இயக்​குந​ராகப் பணி​யாற்​றிய காலத்​தில் அவருடைய படங்​களில் சிறிய வேடங்​களில் தலை​காட்​டிய பாக்​ய​ராஜை, தனது ‘பு​திய வார்ப்​பு​கள்’ திரைப்​படத்​தில் ஹீரோ​வாக துணிச்​சலாக நடிக்க வைத்​தார் பார​தி​ராஜா.

ஹீரோ என்​றால் இப்படித்​தான் இருக்க வேண்​டும் என்று தமிழ் சினிமா போட்டு வைத்​திருந்த வரை​முறை​களைக் கடந்​து, மூக்​குக்​கண்​ணாடி, அப்​பா​வி​யான முகம் போன்ற தோரணை​யில் களமிறங்​கிய பாக்​ய​ராஜை, அந்​தக்​கால ரசிகர்​களுக்​கும் ரசிகைகளுக்​கும் பிடித்​துப் போன​தில் ஆச்​சரி​யம் ஏது​மில்​லை.

‘சுவரில்​லாத சித்​திரங்​கள்’ படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மான பாக்​ய​ராஜ், அந்​தப் படத்​தில் ஒரு தலைக்​காதல், தனது காதலி படும் துன்​பம், பொருளா​தா​ரச் சிக்​கல் என குடும்ப வறுமையை மிக இயல்​பாக​வும் எளிமை​யாக​வும் சொல்​லி​யிருப்​பார். இந்​தப் படம் வெற்றி பெற்று எல்​லோரை​யும் கவனிக்க வைத்​தது. அதைத் தொடர்ந்​து, ‘ஒரு கை ஓசை’ படத்​தில் வாய்​பேச முடி​யாத கதா​பாத்​திரத்​தில் தனது நடிப்பை திறமை​யாக வெளிப்​படுத்​தியி ருப்​பார்.

அடுத்​தடுத்து அவர் இயக்​கிய ‘இன்று போய் நாளை வா’, ‘அந்த 7 நாட்​கள்’, ‘தூறல் நின்னு போச்​சு’ படங்​களில் அப்​பா​வி​யான கதா​பாத்​திரங்​களில் நடித்​தா​லும், அதை நகைச்​சுவையோடு, அழகான மெசேஜை​யும் கதை​யில் புகுத்தி விடு​வ​தில் வல்லவராக இருந்​தார். அதுவே அவருடைய டிரேட் மார்க்​காக​வும், தனக்​கான ரசிகர் பட்​டாளம் உரு​வாவதற்கு காரண​மாக​வும் இருந்​தது என்​றால் மிகையல்ல.

அவரின் ‘அந்த 7 நாட்​கள்’ படத்​தின் கிளை​மாக்​ஸில் அவர் பேசும், “எண்ட காதலி உங்​களுக்கு மனைவி ஆயிட்டு வரும் சாரே… ஆனா, உங்க மனைவி எனக்கு காதலி​யா​யிட்டு வராது சாரே” என்ற வசன​மும் கிளை​மாக்​ஸும் இன்​று​வரை பேசப்​படு​கின்​றன. ‘மெளன கீதங்​கள்’ படத்​தில் அவருக்​கும், மனை​வி​யாக நடித்​திருக்​கும் சரி​தாவுக்​கு​மான காட்​சிகளில் உணர்​வு​கள் பேசும் மவுனத்தை அட்​ட​காச​மாகப் படமாக்கி இருப்​பார் பாக்​ய​ராஜ். தனது குற்ற உணர்ச்​சி​யை​யும் மனித மன உளவியலை​யும் அழகாகச் சொன்ன படங்​களில் அது​வும் ஒன்​று.

‘டார்​லிங் டார்​லிங் டார்​லிங்’ படத்​தின் திரைக்​கதை​யும் அந்த காமெடி கிளை​மாக்​ஸும் தமிழ் சினிமா ரசிகர்​கள் மட்​டுமல்ல, அன்​றைய திரை​யுல​கினரையே ஆச்​சரியப்​படுத்​திய ஒன்​று. அப்​படியொரு துணிச்​சலான கிளை​மாக்ஸை யோசிக்க, குடும்​பங்​கள் கொண்​டாடிய திரைக்​கதை மன்​னன் பாக்​ய​ராஜால் மட்​டுமே முடி​யும். அதே​போல் ‘முந்​தானை முடிச்​சு’ திரைப்​படத்​தின் மூலம் தாய்க்​குலங்​களின் ஆதரவை முற்​றி​லும் தனதாக்​கிக் கொண்​டார்.

மனை​வியை இழந்த கணவன், கைக்​குழந்​தை​யுடன் படும் பாடு​களை​யும், இரண்​டாம் திரு​மணம் செய்து கொண்​டால், சித்​தி​யால் தன் குழந்​தைக்கு ஆபத்து நேருமோ என்ற அவருடைய மனப் போராட்​டத்​தை​யும் திரை​யில் காட்​டிய விதம், பெண் ரசிகர்​களை வெகு​வாக கட்​டிப் போட்​டு​விட்​டது.

அவருடைய படங்​களில் ‘இது நம்ம ஆளு’ முக்​கிய​மான ஒன்​று. சாதி பாகு​பாடு, சமூகத்​துக்கு எதி​ரான கருத்​துகளை கூர்​மை​யான வசனங்​கள் மூலம் விளாசி​யிருப்​பார். அந்​தப் படத்​தின் கிளை​மாக்ஸ் காட்​சி​யில் பாக்​ய​ராஜும், அவரது மாம​னா​ராக நடித்​திருக்​கும் சோம​யாஜுலும் பேசும் வசனங்​கள் சிந்​தனையைத் தூண்​டு​வ​தாக அமைந்​தன. நாயக​னாக மட்​டுமல்​லாமல், வில்​ல​னாக​வும் முத்​திரைப் பதித்​திருக்​கிறார் பாக்​ய​ராஜ்.

பி.​வி.​பால​குரு இயக்​கத்​தில் ராஜேஷ் நடிக​ராக அறி​முக​மான, ‘கன்னி பரு​வத்​திலே’ படத்​துக்​குத் திரைக்​கதை, வசனம் எழு​திய பாக்​ய​ராஜ்​தான், அந்​தப் படத்​தின் வில்​ல​னாக​வும் கலக்​கி​யிருப்​பார். ஸ்டைலாக புகைப்​பிடித்​த​படி, வடிவுக் கரசியை நெருங்​கும் காட்​சிகளில் முந்​தைய படங்​களில் பார்த்த அந்த அப்​பா​வியா இவர்? என ஆச்​சரியப்​படுத்​தி​யிருப்​பார் பாக்​ய​ராஜ்.

நடிப்​போடு இசை அமைத்​தும் அசத்​திய அவர், பாடல்​களின் இனிமை​யிலும் தன்னை நிரூபித்​துக் காட்​டி​னார். சினிமா மட்​டுமல்​லாமல், பத்​திரி​கை​யாள​ராக​வும் முத்​திரைப் பதித்​தவர் பாக்​ய​ராஜ். தான் நடத்​திய ‘பாக்​யா’ இதழின் கேள்வி – பதில் பகு​தி​யில் குட்​டிக் கதைகள் சொல்​லி, வியக்க வைத்​தவர்.

அந்​தக் குட்​டிக் கதைகளுக்​காகவே அந்த இதழை ஆர்​வ​மாக வாசித்​தவர்​கள் ஏராளம். இந்​திய சினி​மா​வின் திரைக்​கதை மன்​னன் என்று அழைக்​கப்​பட்ட கே.​பாக்​ய​ராஜ், சாதாரண கதையை​யும் சுவாரஸ்​ய​மான திரைக்​கதை மூலம் ரசிக்க வைத்​தவர். ஒரு கதையை எங்கு ஆரம்​பித்​து, எப்​படி சொல்​வது என்​ப​தில் கே.​பாக்​ய​ராஜ் அசாத்​திய திறமை கொண்​ட​வர். அவருடைய திரைக்​கதை உத்தி இளம் இயக்​குநர்​களுக்கு பாட​மாக இருக்​கின்​றன.

தென்​மாவட்​டத்​தில் இருந்து சினி​மாவுக்​காக சென்னை வந்​தவர்​களுக்கு பார​தி​ராஜா எந்த அளவுக்கு இன்​ஸ்​பிரேஷ​னாக இருந்​தா​ரோ, அதே​போல் கொங்கு பகுதியில் இருந்து சினி​மாவுக்கு வந்த பல இளைஞர்​களுக்​கு நம்​பிக்​கை நட்​சத்​திர​மாக தி​கழ்ந்​தவர்​ கே.​பாக்​ய​ராஜ்.

நம்​பிக்​கைகளும்​ நட்​சத்​திரங்​களும்​ ஒருபோதும் மறையாது சாரே!