அதிகரித்துள்ள வரிச் சுமையையும் வாழ்க்கைச் செலவையும் குறைக்கக் கோரி போராடிய மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், உண்மையில் ராஜபக்‌ஷக்களின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளுக்கான கட்டணத்தையே மக்கள் தற்போதும் வரிகளின் ஊடாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் போராட்ட இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

நுகேகொடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்துத் தெரிவிக்கும் போதே அவ் இயக்கத்தின் நிறைவேற்றுச் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ மேற்கணடவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வரிச் சுமையும் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே நேற்று போராட்டத்தை ஏற்பாடு செய்தோம். ஆனால், அந்தப் பிரச்சினைக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அரசாங்கம் எமது ஆறு சகோதரர்களைக் கைது செய்து அடக்குமுறையை முன்னெடுத்து வருகின்றது. சுஜித் குருவிட்ட , ஆரியசேன , ரசிக , லலித் , ராமர் , கசுன் ஆகிய எமது தோழர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்துக்காக அவர்களை கைது செய்வதுதான் முன்னைய அரசாங்கங்களும் செய்தது. அவ்வாறான அடக்குமுறையை முன்னெடுத்தவர்களுக்கு இறுதியில் என்ன நடந்தது என்பதை இந்த அரசாங்கம் நினைவுகூர வேண்டும்.

தற்போது சட்டவிரோதமாக மக்கள் ஒன்றுகூடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தே போராட்டங்கள் அடக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் நிறைவேற்றப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் இதைவிட ஆபத்தானதாகும். அதன் மூலம் போராட்டங்களை பயங்கரவாத செயற்பாடுகளாக அடையாளப்படுத்தி தடை செய்யவும், அமைப்புகளை தடை செய்யவும், தனிநபர்களை கைது செய்து தடுத்து வைக்கவும் முடியும்.

இந்த அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தைத் தவிர வேறு மாற்றுவழி தெரியவில்லை. ரணில் விக்கிரமசிங்க அறிமுகப்படுத்திய 18 சதவீத பெறுமதி சேர் வரி தொடர்கின்றது. கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கம் 25 சதவீதம் அதிகமாக வரி வசூலித்துள்ளது.

உண்மையில் இது வரி அல்ல் ராஜபக்ஷக்களின் கட்டணத்தையே நாம் செலுத்துகிறோம். பாரிய நிறுவனங்கள் செலுத்தாமல் வைத்துள்ள பில்லியன் கணக்கான வரிகளால் ஏற்பட்ட இழப்பே இன்று மக்களின் பைகளிலிருந்து அறவிடப்படுகிறது. சாதாரண மக்களின் மீது தொடர்ந்து வரிச் சுமைகள் சுமத்தப்படுகின்றன.

மக்களின் உணவுத் தேவைகள், பிள்ளைகளின் கல்விச் செலவுகள் மற்றும் வைத்தியச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், ஒரே தொழிலின் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இளைஞர்கள் பலர் காலையிலும் இரவிலும் வௌ;வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். இந்த நிலைமையை மாற்றுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இல்லையெனில் சமூகத்தில் மேலும் பொருளாதார நெருக்கடிகள் உருவாகும் என்றும் கூறினார்.

அதனால்தான் இந்த அநியாயமான வரி முறைக்கு எதிராக மக்கள் சக்தியொன்றை கட்டியெழுப்புகின்றோம். அடக்குமுறையால் அந்த மக்கள் சக்தியை தடுக்க முடியும் என அரசாங்கம் நினைத்தால், கடந்த காலத்தை நினைவுகூர வேண்டும்.

ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட அனைவரும் இந்த அடக்குமுறைக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும் என்றார்.