மீனவர்களுக்குள் பிளவுகள் இல்லை

இலங்கையின் 15 கரையோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க இயலாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடி போதாதென்று அரசாங்கத்தின் பாராமுகமும் இந்த மக்களை வாட்டுகிறது. இவ்வாறானதொரு நிலையில் நீர்கொழும்பில் உள்ள மொத்த மீன் சந்தையில் மீனவர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிய வாய்ப்பு கிடைத்தது.

நாமல் கெலும்  – மீனவர் (நீர்கொழும்பு)

மீன்களின் விலைகள் தான் தற்போது பிரச்சினையாக உள்ளன. மீன்களின் விலைகள் அதிகரிக்கிறது. சில சந்தர்ப்பங்களில் குறைவடைகிறது. இதுவே பிரதான பிரச்சினையாக உள்ளது. அத்தோடு எரிபொருள் விலை அதிகரிப்புடன் படகு தொழிலையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. எரிபொருட்களின் விலைகள் அதிகம். பொருட்களின் விலைகளும் அதிகம். முன்னர் சிறிய படகொன்று கடலுக்குச் செல்வதென்றால் பாரிய செலவொன்று இல்லை. ஆனால் தற்போது பெரிய படகொன்று கடலுக்குச் செல்வதாயின் ஒரு பிரயாணத்துக்கு மாத்திரம் 45 இலட்சம் வரை செலவாகிறது. சிறிய படகிற்கு 12 – 13 இலட்சம் வரை செலவாகிறது.

இருந்தும் அந்த படகுகளில் கொண்டு வரப்படும் மீன்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகும். மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலை இல்லை. கட்டுப்பாட்டு விலையொன்று நிர்ணயிக்கப்பட்டால் எவ்வாறாவது தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியும். முன்னரைப் போன்று பெரிய மீன்களும் கிடைப்பதில்லை. இனிவரும் காலங்களில் மீன்பிடித் தொழிலை கொண்டு செல்வது மிகக் கடினமாகும். மீனவர்களால் எவ்வளவு டொலர் நாட்டுக்கு கிடைக்கிறது? ஆனால் ஏதேனுமொரு பிரச்சினையென்றால் மீனவர்களிடமிருந்தே பணத்தை அறவிடுகின்றனர். கொள்ளையர்களால் எமக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.

லெனன் ஜெக்சன் – மீனவர் (நீர்கொழும்பு)

எமக்கு பல பிரச்சினைகள் உள்ளன. ஆழ்கடல் மீன்பிடிக்குச் செல்லும் போது செலவுகள் பன்மடங்கு அதிகமாக உள்ளன. 60 – 70 இலட்சம் வரை செலவாகிறது. ஆழ்கடலுக்குச் சென்றாலும் எதிர்பார்க்குமளவுக்கு மீன்கள் கிடைக்காத நாட்களும் உள்ளன. கடந்த வாரம் 13 நாட்கள் கடலிலிருந்து வந்தோம். வடக்கிலிருந்தும் மீன்பிடிப்போம். இதன் போது வலைகள் சிக்குதல் உட்பட பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோம். இதனால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிப்பதற்காக கடன்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றோம்.

எனவே நிம்மதியாக தொழிலை செய்யக்கூடிய சூழல் இல்லை. அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்தாலும் எமக்கு எவ்வித நிவாரணங்களும் கிடைப்பதில்லை. கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் எனது படகு விபத்துக்குள்ளானது. அதற்கு அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு நிவாரணமும் கிடைக்கவில்லை. காப்புறுதிப்பணம் மாத்திரமே கிடைத்தது.

டிரோன் சல்காது – மீனவர் (நீர்கொழும்பு)

இந்த சந்தையில் மொத்த வியாபாரிகளும் உள்ளனர். சில்லறை வியாபாரிகளும் உள்ளனர். சில்லறை வியாபாரிகள் நாளொன்றுக்கு 1500 – 2000 ரூபா வருமானத்தை மாத்திரமே பெறுவர். மறுபுறம் 50,000 – 100,000 வரை வருமானம் பெறுபவர்களும் இருக்கின்றனர். மீன்களின் வகைகளைப் பொறுத்தும் வருமானம் கிடைக்கும் அளவு மாற்றமடையும். ஆனால் எமக்கு கிடைக்கும் வருமானம் போதுமானதல்ல. மிகவும் கடினமான சூழ்நிலையிலேயே வாழ்க்கையை கொண்டு செல்கின்றோம்.

நாம் பெறும் வருமானம் நூற்றுக்கு 90 சதவீதம் போதாததாகவே உள்ளது. கடந்த காலங்களில் கப்பல்கள் தீ விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் சங்கங்கள் ஊடாகவே நாம் போராடினோம். அரசாங்கத்திடமிருந்து எவ்வித சலுகைகளும் கிடைப்பதில்லை. எவ்வாறேனும் எமது வாழ்க்கையை நாமே முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. மாறாக எமக்கு எவ்வித பாதுகாப்போ, காப்புறுதியோ வழங்கப்படவில்லை. பல ஆண்டுகளாக நாம் தொழில் செய்கின்றோம். ஆனால் இங்கு கீழே விழுந்து தலையில் அடி பட்டாலும் அதற்கும் நாமே தான் மருந்து இட்டுக் கொள்ள வேண்டும். வேறு எந்த வகையிலும் எமக்கு உதவிகள் இல்லை.

 

மேரி ஜெனட் (71) – மீனவர் (நீர்கொழும்பு)

துயரத்துடனேயே நான் இந்த தொழிலை செய்து வருகின்றேன். எனது 3 பிள்ளைகளுக்கும் தொழில் இல்லை. அவர்களையும் நானே பார்த்துக்கொள்கின்றேன். எனது கணவன் இறந்துவிட்டார். இந்த தொழிலால் கடனின்றி உணவை உண்கின்றோம். அதனை விடுத்து வேறு எந்த ஆதாயமும் இல்லை. நீண்டகாலமாக நாம் இங்கு தொழிலில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், எமக்கென சொந்த காணியொன்று இல்லை. ஏனையோரின் காணிகளிலேயே இருப்பிடங்களை அமைத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

லாவோஸ் – மொத்த வியாபாரி  (நீர்கொழும்பு)

இந்த சந்தையில் இரு பிரிவுகள் காணப்படுகின்றன. ஒருபுறம் பெரிய கம்பனிகளுக்கு கொடுக்கப்படும் பாரிய மீன்கள் காணப்படுகின்றன. மறுபுறம் சிறிய மீன்கள் காணப்படுகின்றன. இவை வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. அதாவது மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலிருந்து இந்த சிறிய மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. இவற்றை மொத்தமாகப் பெற்று விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகளும் உள்ளனர். சில்லறை வியாபாரிகளும் உள்ளனர்.

எவ்வாறிருப்பினும் முன்னரைப் போன்று இல்லை. மீன்பிடித் தொழிலை கொண்டு செல்வது மிகவும் கடினமாகவுள்ளது. எரிபொருள் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. கடலுக்குச் சென்று வருபவர்களுக்கு எந்த இலாபமும் இல்லை. வாரக்கணக்கில் செல்லும் படகுகள் உள்ளன. மாதக்கணக்கில் செல்லும் படகுகள் உள்ளன. சில சந்தர்ப்பங்களில் மாதக்கணக்கில் செல்லும் படகுகள் வெறுமனே கரைதிரும்பும் நிலைமைகளும் உள்ளன. டீசல், ஐஸ் என்பவற்றுக்கான செலவுகளை பார்க்கும் போது இறுதியில் 5 சதம் கூட மிஞ்சாது. மாதக்கணக்கிற்கு தேவையான உணவையும் கொண்டு செல்ல வேண்டும். வருமானத்தை விட போக்குவரத்து செலவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

குமார் (56) – மீனவர் (நீர்கொழும்பு)

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமையால் தொழில்களில் ஈடுபடுவது மிகவும் சிரமமாகவுள்ளது. முன்னர் சிறிய படகில் கடலுக்குச் செல்லும் போது 30 000 மாத்திரமே செலவாகும். ஆனால் இன்று அந்த செலவுகள் 140 000 ஆக உயர்வடைந்துள்ளது. இவ்வாறிருக்கையில் ஒன்று அல்லது இரண்டு சந்தர்ப்பங்களில் நஷ்டமடைந்தால் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வது மிகவும் கடினமாகும். நான் சுமார் 30 – 35 வருடங்களாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன்.

தமிழ், சிங்களம், முஸ்லிம் என எவ்வித வேறுபாடும் இன்றி அனைவரும் இந்த தொழிலை முன்னெடுத்து வருகின்றோம். 7 நாட்களில் கடலில் இருந்தாலும் சராசரியாக 250 கிலோ மீன்களை மாத்திரமே பிடிக்க முடிகிறது. இதனால் கிடைக்கும் வருமானம் செலவுடன் ஒப்பிடுகையில் போதுமானதாக இல்லை. கடலில் இருக்கும் சகல நாட்களிலும் மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. கடந்த காலங்களில் கப்பல்கள் தீ விபத்துக்கு உள்ளான போது நாம் முற்றாக வருமானத்தை இழந்தோம். அரசாங்கத்திடமிருந்தும் எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை.

இழப்பீடு தருவதாக அரசாங்கத்தால் கூறப்பட்டாலும், இதுவரையில் எமக்கு கிடைக்கவில்லை. 15 சதவீதமானோருக்கு மாத்திரமே கிடைத்துள்ளது.  அரசியல்வாதிகள் சிங்களவர் தமிழர் என பாகுபாட்டுடன் பேசினாலும், நாம் கடற்றொழிலாளர்களாக ஒற்றுமையுடனேயே இருக்கின்றோம். எமக்குள் எவ்வித வேறுபாடுகளும் இல்லை. மாற்றமும் இல்லை.

விமலசிறி – சில்லறை வியாபாரி (நீர்கொழும்பு)

இந்த நாட்களில் தொழில் ஈடுபடுவது மிகக் கடினமாகவுள்ளது. நான் நாளொன்றுக்கு சுமார் 20 கிலோ மீன்களை விற்பனை செய்கின்றேன். தற்போது மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளமையால், முன்னர் 500 கிராம் மீன் வாங்குபவர்கள் தற்போது 250 கிராம் தான் வாங்குகின்றனர். இந்த வியாபாரமும் இல்லாத நாட்களில் கூலி வேலை கிடைத்தால் அதற்குச் செல்வோம். அதுவும் இல்லை என்றால் அன்றைய நாள் வீட்டில் தான் இருக்க வேண்டும்.

ரஞ்சித் (62) – சில்லறை வியாபாரி  (நீர்கொழும்பு)

நான் நாளொன்றுக்கு 10 கிலோ மீன்களை எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றேன். இதன் மூலம் 1500 – 2000 ரூபா வரை வருமானம் கிடைக்கும். வாரத்தில் 5 நாட்கள் மாத்திரமே தொழில் செய்கின்றேன். மீன்கள் இல்லாத நாட்களில் தொழிலும் இல்லை. தற்போதுள்ள வாழ்க்கை செலவுடன் ஒப்பிடுகையில் இந்த வருமானம் போதாது. ஆனால் என்ன செய்வது? சமாளித்துதான் செல்ல வேண்டியுள்ளது.

பெனடிக் – மெலிஞ்சிமுனை மீனவர்  

கடல் அட்டை பண்ணைகள் எமது வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளன.  அதனை எதிர்த்துப் போராடினோம். அப்போது கைவிடப்பட்ட போதிலும், தோல்வியடைந்துள்ளோம் என்று மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பெனடிக் குறிப்பிட்டார்.

கடலட்டை பண்ணைகள் இந்த பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையினால், நண்டு மற்றும் இறால் உள்ளிட்ட சிறு மீன்பிடித்துறையில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது மாத்திரமின்றி, மேலும் பண்ணைகள் அமைக்கப்பட்டால், மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்படும். எனவே தான் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம். எனவே மீனவர்களின் பிரச்சினைகளை அரசாங்கம் நல்நோக்குடன் அணுக வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இலங்கை மீனவர் சங்கத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா (யாழ்ப்பாணம்)

மீனவர்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை அரசாங்கம் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமலிருக்கின்றமையாகும். 2017ஆம் ஆண்டு 11ஆம் இலக்க சட்டம், 1996ஆம் ஆண்டு இரண்டாம் இலக்க சட்டம், 2018ஆம் ஆண்டு வெளிநாட்டு படகுகள் ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்டம் என்பவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் சட்ட விரோத தொழில்கள் அதிகரித்துள்ளன. சட்ட விரோத தொழில்களால் கடல் வளங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த முடியாமலுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுவது மிகப்பெரியவொரு பாதிப்பாகக் காணப்படுகிறது. அத்தோடு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்ட மூலம் ஒட்டுமொத்த கடற்றொழிலாளருக்குமே பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே காணப்படுகிறது. கம்பனிகளையும், சர்வதேச முதலீட்டாளர்களையும் எமது கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான மறைமுக முயற்சியே இதன் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. எனவே அந்த சட்டம் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே இலங்கையில் ஒட்டுமொத்த மீனவர்களின் நிலைப்பாடாகவுள்ளது.

இது தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மீனவர்களை ஒன்று திரட்டி யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் கூட்டமொன்று இடம்பெற்றது. அதே கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி நீர்கொழும்பில் இடம்பெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். நீர்கொழும்பிலுள்ள தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அலுவலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இலங்கையிலுள்ள கடலோர 15 மாவட்டங்களையும் சேர்ந்த மீனவ அமைப்புக்கள் இதில் பங்கேற்கவுள்ளன. யாழில் நடத்த கூட்டத்திலும் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.

வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அமைச்சர் கடற்றொழில் அமைச்சராகக் காணப்படுகின்ற போதிலும், தென்னிலங்கையைச் சேர்ந்த அமைச்சரொருவர் இருந்த போது காணப்பட்ட ஜனநாயகம் தற்போது வடக்கில் இல்லை. சர்வாதிகாரமாகவும் மீனவர்களுக்கு ஒவ்வாத செயற்பாடுகளையுமே செய்து வருகின்றனர். முதலீடு, டொலர் என்பவற்றில் கவனம் செலுத்தப்படுகின்றதே ஒழிய மீனவருக்குரிய எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. பின்தங்கிய நிலையிலேயே மீனவ சமூகம் சென்று கொண்டிருக்கிறது.

குறிப்பாக  தென்னிலங்கை மீனவர்களை விட வடக்கு மாகாண மீனவர்கள் 30 வீதம் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றனர். வடக்கில் மீன்பிடி கூட்டுறவு சங்கங்களுக்குரிய ஒரு துறைமுகம் கூட இல்லை. இன்றும் வடக்கில் கண்ணாடி லேனார்  படகில் தான் தொழில்புரிகின்றனர். யாழில் 27 ஒரு நாள் படகுகள் மாத்திரமே உள்ளன. வடக்கு கடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி கடற்றொழிலை விட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலைமையே தற்போது காணப்படுகிறது. கடற்றொழிலில் அதிக பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாகாணமாகவும் வட மாகாணமே காணப்படுகிறது.

இந்த  பிரச்சினைகளுக்கு  தீர்வு காண்பதற்கு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கடற்றொழில் முறையாக முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும். சட்ட விரோத தொழில் முறைகளுக்கு உபயோகப்படுத்தும் வலைகளை இறக்குமதி செய்வதை அரசாங்கம்  நிறுத்த வேண்டும். திணைக்களங்கள் பொறுப்பாக செயற்பட வேண்டும். அரசியல் தலையீடு காரணமாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளால் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலைமை காணப்படுகிறது. கடற்சூழலைப் பாதிக்கும் சட்ட விரோத மீன்படி நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு ஒட்டுமொத்த மீனவர் சமூகமும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு வடக்கு, தென்னிலங்கை என சகல தரப்பினரும் இணைந்து தீர்வு காண்பதற்கான முதற்கட்ட முயற்சி வெற்றியளித்துள்ளது. அதன் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி காணப்படுகிறது. 2024இல் எமது ஒற்றுமையின் பலன் வெளிப்படுத்தப்படும். ஒட்டுமொத்த கடற்றொழிலாளரும் எமது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்து போராடுவோம் என்றார்.

தேசிய  மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹேர்மன் குமார (நீர்கொழும்பு)

தற்போதுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பால் கடலுக்குச் செல்வதே மீனவர்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாகக் காணப்படுகிறது. அதனைத் தாண்டி கடலுக்குச் சென்று மீன்களை பிடித்து வந்தாலும், அவற்றை நியாயமான விலையில் விற்பதிலும் சிக்கல்கள் உள்ளன. செலவுகளுடன் ஒப்பிடுகையில், உரிய வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.

வடக்கிலுள்ள அமைச்சர் வடக்கு மீனவர்களுக்கும், தென்னிலங்கை அமைச்சர் தெற்கு மீனவர்களுக்கும் நிவாரணங்களை வழங்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குற்றச்சாட்டுக்களாகவே உள்ளன. ஆனால் உண்மை என்னவென்றால் எந்த அமைச்சர் வந்தாலும் எவருக்கும் எதுவும் செய்வதில்லை. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடற்றொழில் சட்டத்தினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை தவிர்ப்பதற்காக வடக்கு மற்றும் தெற்கு மீனவர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் நாம் வடக்கிற்கு சென்று அங்குள்ள மீனவர்களுடன் இது தொடர்பில் பேசினோம். மீண்டும் எதிர்வரும் 26ஆம் திகதி நீர்கொழும்பில் இது குறித்த பேச்சுவார்த்தை உள்ளது. புதிய சட்டம் உட்பட ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு மற்றும் தெற்கு மீனவர்களுக்கிடையில் பொது இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கின்றோம். இதன் போது எடுக்கப்படும் ஒன்றிணைந்த தீர்மானத்தை ஜனாதிபதி உட்பட ஏனைய தரப்புக்களிடம் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போதுள்ள மீனவர் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையும். எமது கடலை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கும் அச்சுறுத்தல் காணப்படுகிறது. கோட்டா முறைமையில் சிறு மீன்பிடி தொழிலாளர்களை பலமற்றவர்களாக்கும் நிலைமையும் இதன் மூலம் ஏற்படும். இவற்றை தவிர்ப்பதற்காகவே நாம் நீர்கொழும்பில் ஒன்று கூடுகின்றோம் என்றார்.

இவ்வாறு மீனவர்கள் மற்றும் கடற்றொழிலுடன் தொடர்புப்பட்ட பலரும்  தாம் எதிர்க்கொள்கின்ற  துன்பங்களை கூறினர்.  ஆனால் பிரதேச ரீதியாக இலங்கையின் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வௌ;வேறானாலும் மீனவ சமூகத்தின் பொது பிரச்சினைகளில் ஒன்றுப்பட்டு குரல் கொடுக்கும் மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் ஆர்வம் காட்டுமா?