ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் நடத்திய வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததுடன் ஏனைய சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
குறித்த ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று பகல் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டபோது, அதனை வாங்கி சாப்பிட்ட இளைஞர் ஒருவர், “உணவு சரியில்லை” என தெரிவிக்க, அன்னதானம் வழங்கியவர்களுக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து 7 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அன்னதானம் வழங்கியவர்களைத் தாக்கியதில், பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். பின், அவர்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடிக்க, ஏனைய சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும், ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தப்பி ஓடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.




