மாலைத்தீவு வர்த்தக உறவுகளை வலுப்படுத்த புதிய வாய்ப்புகள்: அமைச்சர் வசந்த சமரசிங்க!

பாரம்பரிய வர்த்தகத்தைத் தாண்டி, விவசாயம், சுற்றுலா, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட புதிய துறைகளில் இணைந்து செயற்படுவதன் மூலம் இலங்கை – மாலைத்தீவு வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இலங்கை மற்றும் மாலைத்தீவு வர்த்தக சங்கத்தின் 18 ஆவது பொதுக்கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை  (28) கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்தியப் பெருங்கடலின் இரு அண்டை நாடுகளான இலங்கையும், மாலைத்தீவும் நீண்டகாலமாகத் தூதரக உறவுகளைத் தாண்டி, வலுவான கலாசார மற்றும் பொருளாதாரப் பிணைப்பைக் கொண்டுள்ளன. உலகப் பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் தற்போதைய சூழலில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டில், இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு சுமார் 132 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் மின்கடத்தி கம்பிகள் மற்றும் கேபிள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேவேளையில், மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கு சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடுகளின் பட்டியலில் மாலைத்தீவு 16 ஆவது இடத்தில் உள்ளதுடன், கடந்த ஆண்டில் மட்டும் 37,000க்கும் மேற்பட்ட மாலைத்தீவு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

பாரம்பரிய வர்த்தக முறைகளைத் தாண்டி, புதிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு நாடுகளும் அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக, பழங்கள், காய்கறிகள், தேயிலை, கோதுமை மா மற்றும் மாலைத்தீவின் தனித்துவம் மிக்க டின் மீன் தொழில்துறை ஆகியவற்றில் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

சுற்றுலா, விருந்தோம்பல், கல்வி, சுகாதாரம் மற்றும் பாரம்பரிய மருத்துவம் ஆகிய சேவைத் துறைகளிலும் வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் நிலையான, வெளிப்படையான மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த வர்த்தகச் சூழலை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது. இத்தகைய சூழலில், பெரிய வர்த்தக நிறுவனங்கள் மட்டுமன்றி, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்கள் மற்றும் வளர்ந்து வரும் புதிய தொழில்முனைவோருடன் வர்த்தக சபைகள் தமது இணைப்பை விரிவுபடுத்தி, எதிர்வரும் காலங்களிலும் வெற்றிகரமாகச் செயல்பட வேண்டும் என்றார்.