இந்தியா திரும்பவுள்ளனர் கைதான 19 இந்திய மீனவர்கள்

சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (20) மாலை விடுவிக்கப்பட்டு தாயகம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இந்திய – சிறிலங்கா கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு மொத்தம் 360 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 339 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ் ஆண்டு இதுவரை மொத்தம் 104 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றையதினம் மேலும் 19 பேர் தாயகம் திரும்புகின்றனர்.

தற்போது 82 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் உள்ளனர். இவர்களில் 31 பேர் விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர். 51 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்திய மத்திய அரசு மற்றும் வெளிவிவகார அமைச்சு எடுத்து வரும் தீவிர முயற்சிகளினால் கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை மொத்தம் 3,750 இந்திய மீனவர்கள் இலங்கையிடமிருந்து மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவாக விடுவிக்க இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சமீபத்திய செய்திகள்