இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 91(1) < (xiii) பிரிவின் பிரகாரம், இரட்டை குடியுரிமை கொண்டுள்ள ஒருவர் அரச நிர்வாகத்தில் உயர் பதவிகளை வகிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவிடம் தினன தகுன கூட்டிணைவு ஐந்து பகிரங்கக் கேள்விகளை முன்வைத்துள்ளது.
நாட்டின் அடிப்படைச் சட்டம் மற்றும் அரச அதிகாரி ஒருவரின் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி விடுக்கப்பட்டுள்ள இந்த வினாக்களுக்கு, உரிய ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன் நிதி அமைச்சின் செயலாளர் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என தினன தகுன கூட்டிணைவுpன் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க, நதீஷ டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மற்றும் ஊடகப் பேச்சாளர் துஷார வீரரத்ன உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழு திங்கட்கிழமை (4) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது நிதி அமைச்சின் செயலாளர் தொடர்பாக எழுந்துள்ள விவகாரமானது வெறும் அரசியல் குற்றச்சாட்டுகள் மாத்திரமல்ல. இது நாட்டின் அடிப்படைச் சட்டம் மற்றும் அரச அதிகாரி ஒருவரின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்வியாகும். அத்துடன் இது ஒரு பாரிய குற்றச்சாட்டாக உருவெடுக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதை கருத்திற் கொண்டு, இதற்குரிய ஆவணங்கள் மற்றும் சான்றுகளை நாட்டுக்கு வெளிப்படுத்துவது நிதிச் செயலாளரின் பொறுப்பாகும்.
தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நாட்டுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையுடனான நல்ஆட்சியை கட்டியெழுப்புவதற்கு சமூகத்தில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு இந்தச் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
தற்போது சமூகத்தில் பகிரப்பட்டு வரும் 2010-02-03 திகதியிடப்பட்ட C19090060828 எனும் இலக்கம் உங்களுடைய அவுஸ்திரேலிய குடியுரிமைக்குரிய இலக்கமா? அல்லது அது பொதுமக்களைத் திசைதிருப்புவதற்காகப் பரப்பப்படும் தவறான தகவலா? என்பதையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.





