நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய ஏற்றுமதி துறையாக விளங்கும் இரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறையை சர்வதேச ரீதியில் போட்டித்திறன் மிக்கதாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதன் மூலம் இத்துறையை இலங்கையின் முன்னணி அந்நியச் செலாவணி வருவாய் ஈட்டும் துறையாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் அங்கு அவர் தெரிவித்ததாவது,
இலங்கையின் இரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறையை சர்வதேச மட்டத்தில் வலுப்படுத்தி, நாட்டை உலகளாவிய இரத்தின வர்த்தக மையமாக நிலைநிறுத்தும் நோக்கில் “ஜெம் சிட்டி இரத்தினபுரி 2026” (Gem City Ratnapura 2026) சர்வதேச கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை இரத்தினபுரி கிரேட் சில்வர் ரே ஹோட்டல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய ஏற்றுமதி துறையாக விளங்கும் இரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறையை சர்வதேச ரீதியில் போட்டித்திறன் மிக்கதாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதன் மூலம் இத்துறையை இலங்கையின் முன்னணி அந்நியச் செலாவணி வருவாய் ஈட்டும் துறையாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இத்துறை மூலம் ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாய் ஈட்டப்படுகிறது. இதனை மேலும் விரைவுபடுத்தும் வகையில், இத்துறையின் முழுமையான மதிப்புச் சங்கிலியை உள்ளடக்கிய பல கட்டமைப்பு மற்றும் கொள்கை ரீதியான மாற்றங்களை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது.
உலகப் புகழ்பெற்ற நீலக்கல் உள்ளிட்ட பல அரிய வகை இரத்தினங்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க இரத்தினபுரி நகரில் இக்கண்காட்சி நடத்தப்படுவது இதன் விசேட அம்சமாகும். இம்முறை இக்கண்காட்சியானது “Home to the Finest” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சர்வதேச இரத்தின மற்றும் நகை கண்காட்சிகளின் உலகளாவிய கால அட்டவணைக்கு ஏற்பவே இது திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், செப்டம்பர் மாதத்தில் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் நடைபெறும் சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்கவுள்ள வெளிநாட்டு கொள்வனவாளர்கள், அதற்கு முன்னதாக இலங்கைக்கு வருகை தந்து உள்நாட்டு இரத்தினத் தொழில்துறையின் உண்மையான அனுபவத்தை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இக்கண்காட்சியில் 7,500 க்கும் அதிகமான பார்வையாளர்களும், 200 க்கும் மேற்பட்ட சர்வதேச கொள்வனவாளர்களும் பங்கேற்றிருந்தனர். அந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, இம்முறை நடத்தப்படும் கண்காட்சியானது அதற்கும் மேலான சர்வதேச பங்களிப்புடன், உள்நாட்டு வர்த்தகர்களுக்கு பரந்தளவிலான புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.





