ஈழத்தமிழர்களுக்கு இத் தருணத்தில் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவு தேவை: சுகாஷ்

ஈழத்தில் விஜயின் இரசிகர்கள் சீமானைத் தூற்ற வேண்டியதில்லை. சீமானின் ஆதரவாளர்கள் விஜயை எதிர்க்க வேண்டியதுமில்லை. ஈழத்தமிழர்களுக்கு இத் தருணத்தில் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவு தேவை என்பதை நினைவில் நிறுத்துவோமெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விஜயா? அல்லது  சீமானா?  இன்று ஈழத் தமிழர்களின் சமூக ஊடகப் பக்கங்களில் அதிகம் பேசப்படும் விடயம் இதுவே. தாம் விரும்பிய தலைவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆரம்பித்துத் தற்சமயம் மாற்றுத் தரப்பு மீதான வன்மத்தைக் கக்குவதாக நகர்கின்றது. இது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டுமென்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.

தமிழகத் தலைவர்களுடன் தொடர்புகளும், உறவுகளும் இருப்பது தவறல்ல. அது தேவையானதும் கூட. ஆனால், எதிர்ப்பது ஒன்றுக்குப் பலதடவை சிந்தித்துச் செயற்பட வேண்டிய விடயம். விடுதலையே வேண்டும் ஈழத் தமிழினத்துக்கு! இத் தருணத்தில் தமிழகத்தின் ஆதரவு தவிர்க்க முடியாதது என்பதை நினைவில் கொள்வோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கும் மிக நெருக்கமான உறவு இருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் எத் தருணத்திலும் எம்.ஜி.ஆரின் அரசியல் போட்டியாளரான முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியைப் பகிரங்கமாக எதிர்க்கவோ, விமர்சிக்கவோ இல்லை என்பதை அனுபவப் பாடமாகக் கொள்வோம்.

ஈழத் தமிழினத்தைக் கூறுபோடவும், இனப் படுகொலையைத் திசைதிருப்பவும் இலங்கை அரசாங்கமும், அதன் முகவர்களான தமிழ் எட்டப்பர்களான அரசியற் கோமாளிகளும் போடும் திட்டத்துக்குப் பலிக்கடா ஆவதைத் தவிர்ப்போம்!  தமிழக முதலமைச்சரின் ஆட்சிப் பணி சிறக்கட்டும்! அண்ணன் சீமானின் தமிழ்த்தேசியப் பணி செழிக்கட்டும்!  இலங்கை அரசினதும், அதன் முகவர்களான குறளிவித்தைக் கோமாளிகளதும் கூத்துக்களை இனியாவது ஈழத் தமிழினம் உணர்ந்து தெளியட்டும்! எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.