ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (20) உத்தரவிட்டது.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, கடந்த 2015ஆம் ஆண்டு அவர் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில், உரிய சட்ட நடைமுறைகளை மீறி காலி மாவட்டத்தைச் சேர்ந்த 134 பேரை தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தில் சிற்றூழியர்களாக நியமித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் அமைச்சரின் அரசியல் ஆதரவாளர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், ஒழுக்காற்று காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி பணிப்பாளர் என். யோகராஜாவின் இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததன் மூலம், முன்னாள் அமைச்சர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் புரிந்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது. இது குறித்து உரிய உத்தரவை பிறப்பிக்குமாறும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
விடயங்களை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையையும் விதித்துள்ளார்.
சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு எச்சரித்த நீதவான், இந்த வழக்கின் விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டு அன்றைய தினம் வரை வழக்கை ஒத்திவைத்துள்ளார்.



