இந்தநாட்டில் அகிம்சைவழியில் உரிமைக்குரல் உயரும்போதெல்லாம் அரச இயந்திரங்களின் துணையோடு தமிழர்கள்மீதான அடக்குமுறைகள் இனக்கலவரங்களாகத் தொடர்ந்ததாகத் தெரிவித்த வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறாக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதாலேயே தமிழர்கள் சமஷ்டியையும், தனி ஈழத்தையும் கோரவேண்டியநிலை ஏற்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எனவே ஆட்சியாளர்கள், இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகமான ஈழத் தமிழர்களுக்கு அரணாகுவதால் மாத்திரமே இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுமெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்துகாணால் ஆக்கப்பட்டோர் விவகாரம், முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை, புதைகுழிகள் விவகாரம், நினைவேந்தல் உரிமை உள்ளிட்ட தமிழர்கள் நீதிகோரும் விடயங்களுக்கு ஆதரவாக ஆட்சியாளர்களும் குரல் கொடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
கறுப்பு ஜூலை தொடர்பாக பாராளுமன்றில் 23.07.2026இன்று பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
இன்றைய நாள் தேசிய மக்கள் சக்தி சார்பாக சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையை கொண்டுவந்துள்ள கௌரவ உறுப்பினர் தனுர திசாநாயக்க அவர்களின் நல்ல நோக்கங்கள் நிறைவேறட்டும்.
பேரவைத் தலைவர் அவர்களே!
ஈழத்தமிழர்களும் ஈழத்தமிழர்களின் சார்பாளர்களாக இந்தப் பேரவையிலே கடந்த காலங்களில் இருந்தவர்களும் இப்போது இருக்கின்றவர்களாக நாமும் நல்லிணக்கத்துக்கு எதிரானவர்களல்லர். ஈழத்தமிழர்களாகிய நாங்களும் எமது தாயகத்தில், தன்னாட்சி அதிகாரங்களோடு ஒரு தேசிய இனமாக வாழவேண்டும் என்பதே எங்களின் அன்று தொட்டு இன்றுவரையான அடிப்படைக் கோரிக்கையும் அரசியலும். ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்த தீவையும் அளவற்று நேசித்தவர்கள். நேசிப்பவர்கள்.
தீவு முழுமைக்கும் படர்ந்திருந்திருந்த எங்கள் வாழ்வும் வளமும் காலவெளியிலே அடக்குமுறைகளால் சுருக்கப்பட்டது. எண்ணிக்கையில் சிறுபான்மையினருக்கு அரணாகுதல் என்பதே பல்லினவாழ் சமூகத்தின் நிலைபேறான எழுச்சிக்கான அடிப்படை. ஆனாலும் இத்தீவின் அதிகாரம் பிரித்தானியரிடம் இருந்து கைமாற்றப்பட்ட பின்னர் மாறிவரும் ஒவ்வோர் அரசாங்கமும் அவ் அடிப்படை கருத்தியலை கையிலெடுக்கவில்லை. மாறாக ஈழத்தமிழர்களின் உரிமைகளை நேரடியாகவும் கட்டமைக்கப்பட்ட வழிகளிலும் கட்டுப்படுத்தியது. கட்டுப்படுத்துகிறது.
பேரவைத் தலைவர் அவர்களே!
கறுப்பு யூலை என்பது ஈழத்தமிழர் அழிப்பில் தொடக்கப்புள்ளியும் அல்ல. முற்றுப்புள்ளியும் அல்ல. மாறாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வெளியிலே கறுப்பு யூலை ஒரு காற்புள்ளி.
கல்லோயா குடியேற்றத்திட்டங்களுக்காக 1956 இல் கொல்லப்பட்டோம். எங்கள் வாழிடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டோம்.
தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்தோம். அதனால் 1958இல் மீண்டும் கொல்லப்பட்டோம். அகிம்சை வழியில் எங்களின் உரிமைக்குரல் உயரும் போதெல்லாம் அரச இயந்திரத்தின் துணையோடு எம்மீதான அடக்குமுறைகள் இனக்கலவரங்களாக தொடர்ந்தன.
1977ஆம் ஆண்டின் பின்னர் 1981 இல் யாழ்ப்பாணத்தில் நேரடியாக எங்கள் யாழ் நூலகமும் கடைகளும் சொத்துகளும் அரச ஆதரவோடு எரித்து நாசமாக்கப்பட்டன. அதன் பின்னரே இன்றைய ஒத்திவைப்பு வேளையில் உரையாடப்படும் கறுப்பு யூலைக்கலவரம் அரங்கேறியது. உயிரோடு எரிக்கப்பட்டோம். சொல்லொணா உயிர், உடமை இழப்புகளுக்கு ஈழத்தமிழர்கள் நாம் உள்ளாக்கப்பட்டோம். பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் ( ICJ ) இதனை இனப்படுகொலை என விபரித்தது.
இதன் தொடர்ச்சியாக சிறைகளுக்குள்ளும் அரச ஆதரவோடு தமிழர்கள் மீதான இனக்கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. 1983 வெலிக்கடை, 1997 களுத்துறை, 2000 பிந்துனுவேவா என இப்பட்டியல் நீண்டது. பல்லினவாழ் சமூகம் இத்தீவில் மட்டும் வாழவில்லை. மாறாக பல்லினவாழ் சமூகம் வாழும் அனைத்து இடங்களிலும் இவ்வாறான அடக்குமுறைகளும் இனக்கலவரங்களும் தொடர்ச்சியாக ஏவப்படுவதுமில்லை.
இன்று, எங்களுக்காக இறந்த எங்களின் உறவை நினைவேந்த இயலுமாக இருப்பது தான் சுதந்திரம் என்று இருக்கும் நிலைக்கு இத்தீவில் சுதந்திரம் சுருக்கப்பட்டுவிட்டது. உரத்துக்கேட்டு உயிர் மாய்த்து இன்று செம்மணியில் என்புகளாகியும் இந்தத்தீவிலே எங்கள் நீதியை வேண்டிக்கொண்டு இருக்கிறோம்.
கௌரவ உறுப்பினர், தனுர திசாநாயக்க அவர்களின் கோருகின்ற நல்லிணக்கம் எப்போதும் நிரந்தரமாக எங்களிடம் இருந்தது தான். அடக்குமுறையே சமஸ்டியை கோரியது. அடக்கு முறையே தனி ஈழத்தை தீர்வாக்கியது. அடக்குமுறையே இன்றளவும் இந்தத்தீவிலே இயல்பான எங்களை வேறுபட்டவர்களாக காட்டுகிறது. எங்களின் நீதிக்காக நீங்களும் குரல் கொடுங்கள்.
எங்களுக்காக பல்வேறு வழிகளிலும் போராடியவர்கள் அரசியல் கைதிகளாக சிறையிலே வாடும் போது நல்லிணக்கம் எப்போது மலர்ந்துவிடும். கடைசி அரசியல் கைதியும் சிறையிலே மரணிக்கும் வரை கூட இந்த அரசின் நெஞ்சும் கல்லாகித்தான் கிடக்குமா!
அரசிடம் நம்பி ஒப்படைத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளின் நீதிக்காக குரல் கொடுங்கள்.
1956இலேயே எம்மீதான இனக்கலவரத்துக்கு நீதி கிடைத்திருந்தால் 2009 வரை இனப்படுகொலைகள் தொடர்ந்திருக்காது. அரசே ஆதரவாகி நின்று மேற்கொண்ட குற்றங்களுக்கு அரசே எவ்வாறு தீர்வு கொடுக்கும்? கொடுக்க இயலும்? பன்னாட்டு விசாரணைகளுக்காக குரல் கொடுங்கள். ஈழத்தமிழர்கள் ஒருபொழுதும் நல்லிணக்கத்துக்கு எதிரானவர்களாக இருந்ததில்லை. மாறாக பல்வேறு வழிகளிலும் தம்மை தற்காத்தபடி உயிரிழந்து உடமை இழந்து நிலமிழந்து அடையாளங்களை இழந்து தொடர்ந்தும் தமக்கான நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். பேரவைத் தலைவர் அவர்களே! எமக்கு அரணாகுதலே – இந்தத்தீவில் நல்லிணக்கம் என்றார்.


