நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சீர்கேடுகள் மற்றும் சிறைச்சாலை மோதல்கள் குறித்து அரசாங்கமும், நீதியமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி நாளை (இன்று) பாராளுமன்றத்தில் விவாதிக்கவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை தீவிரமாக எதிர்க்கட்சியினர் முன்னெடுக்க வேண்டும் என்று ஜனநாயகத்துக்கான சமூக ஊடகவியலாளர் சங்கத்தின் பணிப்பாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (23) சுதந்திர கட்சி தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் கொழும்பு மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் தீவிரமடைந்துவரும் நோய்ப் பரவல்களால் பொதுமக்கள் உயிரிழக்கும் நிலை அதிகரித்துள்ளது. அத்துடன், சிறைச்சாலைக்குள் முன்கூட்டியே புலனாய்வுத் துறையினரின் தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய இதுபோன்ற சம்பவங்களை அரசாங்கம் அலட்சியப்போக்குடன் கையாண்டதன் விளைவே இந்த உயிர் இழப்புகளுக்கு பிரதான காரணமாகும்.
இதுபோன்ற தீவிரமான விவகாரங்கள் குறித்து நீதித்துறை அமைச்சரிடம் வினவியபோது, நான் பேஸ்புக் பார்ப்பதில்லை என்றும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை என்றும் கூறுவது ஒரு பொறுப்புள்ள உயர் பதவியில் இருப்பவருக்குச் சிறிதும் பொருத்தமற்ற செயலாகும். வெறுமனே பொய்களைக் கூறித் தப்பியோட முயலும் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பதவிகளிலிருந்தும் பாராளுமன்றத்திலிருந்தும் வீட்டிற்கு அனுப்ப வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது.
நாளை (இன்று) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை, வெறும் சாதாரண சபை நடவடிக்கையோடு முடித்துவிடாமல், நாட்டின் தற்போதைய உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் ஒரு தீவிரமான விவாதமாக எதிர்க்கட்சியினர் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இதன்போது சங்கத்தின் பிரதிநிதி கெலும் ஜயசுமன கருத்து தெரிவிக்கையில், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, பாதாள உலகக் குழுக்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாகத் இலங்கையின் ஆட்சி அதிகாரம் தற்போது பாதாள உலகக் குழுக்களின் கைகளிலேயே உள்ளது, நாட்டில் விசேட நிகழ்வொன்றை நடத்துவதற்கு கூட அரசாங்கத்திடம் அனுமதி கேட்பதற்குப் பதிலாக பாதாள உலகத் தலைவர்களிடம் அனுமதி கேட்க வேண்டுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், குற்றங்களைத் தடுப்பதை விடுத்துச் சிறைச்சாலைகளை நிரப்பும் பணியையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. வெறும் 10,400 பேரை மட்டுமே வைத்திருக்கக்கூடிய கொள்ளளவு கொண்ட சிறைச்சாலைகளில் 40,000க்கும் அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நெருக்கடிமிக்க சூழலினால் சிறைகளுக்குள் மோதல்களும், தற்கொலைகளும் அதிகரித்துள்ளது. இறுதியாக, நாட்டின் சட்டத்தின் ஆட்சி முற்றிலும் பிளவுபட்டு நாடு அராஜக நிலையை அடைந்துள்ளது. வரலாற்று ரீதியாக எந்தவொரு அரசாங்கமும் விவசாயிகளை இந்த அளவுக்கு மோசமாக நடத்தியதில்லை. அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் ஜனநாயகத்தை விடுத்து ஸ்டாலின் பாணியிலான அடக்குமுறை ஆட்சியை நடத்தி வருவதுடன், நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளதால், எதையும் செய்ய முடியாத இந்த அரசாங்கம் உடனடியாகப் பதவியை விட்டு விலகி வீட்டுக்குச் செல்லத் தயாராக வேண்டும்.
இதன்போது சங்கத்தின் மற்றொரு பிரதிநிதியான நந்தன குடா மீகொட கருத்து தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட பொது நிதிச் சட்டத்தை தற்போதைய அரசாங்கம் மீறியுள்ளது. அரசாங்கம் முன்வைக்கும் அழகான நாடு, அழகான வாழ்க்கை என்ற கருத்துக்கும், தற்போதைய பொருளாதார உண்மை நிலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, மக்கள் தாங்கள் விரும்பும் ஒரு தலைமையை எதிர்பார்க்கிறார்கள். இறுதியாக, எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாத இந்த அரசாங்கம், உடனடியாக ஆட்சியை விட்டு விலகத் தயாராக வேண்டும் என்று வலியுறுத்தினர்.


