மாகாணசபைத் தேர்தல் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.எல்லை நிர்ணய பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காணப்பட வேண்டு மென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற விசேட செயற்குழுவில் முன்னிலையாகி பல விடயங்களை முன்வைத்தோம்.
2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதியால் பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு இரண்டு மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பித்திருந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தியிருக்கலாம்.
எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு குறித்த காலப்பகுதியில் அறிக்கை சமர்ப்பிக்காத நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட ஏற்பாடுகள் ஏதும் குறிப்;பிடப்படவில்லை. இந்த சிக்கல்கள் குறித்து பாராளுமன்ற விசேட குழுவில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளிடம் வினவப்பட்டது.
இந்த சட்ட சிக்கல் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெகுவிரைவில் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
மாகாணசபைத் தேர்தல் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.எல்லை நிர்ணய பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காணப்பட வேண்டும்.அப்போது தான் சிறந்த முறையில் தேர்தலை நடத்த முடியும் என்றார்.





