மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான விருப்பங்களை வெளிப்படுத்துவதற்காக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்தல விமான நிலையம் சுமார் 600 ஹெக்டயர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், முதலீட்டாளர்களுக்குப் பரந்த அளவிலான வாய்ப்புகளை வழங்குகிவருவதால் விமான நிலையத்தின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வணிக ரீதியான பயன்பாடுகளில் பங்கேற்க ஆர்வமுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை மைய்யமாகக் கொண்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்கத்தால் பயணிகள் போக்குவரத்துச் செயல்பாடுகளை மட்டும் நோக்கமாகக் கொண்ட ஏல முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமையால் முன்னைய அரசாங்கத்தின் ஏல நடைமுறைகளை இரத்து செய்ய அமைச்சரவை எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்தே இந்த புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
விமான நிலைய செயல்பாடுகள், சரக்கு மற்றும் விநியோக சேவைகள், விமானப் பராமரிப்பு, விமான உதிரிப்பாகங்கள் உற்பத்தி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகள் மற்றும் பொதியிடல் வசதிகளுக்கான கைத்தொழில் பூங்காக்களை நிறுவுதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் ஆகியவை இந்த புதிய திட்டத்தின்கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
தரவுகளின்படி, மத்தல விமான நிலையம் வருடாந்தம் சுமார் 3 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கின்றதாகவும் 2025 ஆம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை 150,000 என்ற உச்சத்தை எட்டிய போதிலும், இது விமான நிலையத்தின் ஒரு மில்லியன் பயணிகள் கொள்ளளவை விட மிகக் குறைவான மட்டத்திலேயே உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த விமான நிலையம் பாரிய நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை சுட்டிகாட்டியுள்ளது.





