எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தடுத்து வைப்பு – சிவில் சமூகம் கடும் கண்டனம்!

ஈழத்தின் பிரபல தமிழ் கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வனின் கவிதைத் தொகுப்புகள் சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டமை மற்றும் அது தொடர்பாக கலாசார அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, சிங்கள மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவில் அச்சிடப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தீபச்செல்வனின் ஐந்து நூல்களைக் கொண்ட 360 பிரதிகள், கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டன.

இது தொடர்பில் கலந்துரையாட கடந்த 17ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு அழைக்கப்பட்ட எழுத்தாளர் தீபச்செல்வன், வெறும் கையுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். தேசிய கலைக் குழுவின் அவதானிப்பு அறிக்கையைப் பெற்ற பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஏமாற்று நடவடிக்கை என எழுத்தாளர்கள் சாடியுள்ளனர்.

கலாசார அமைச்சுக்கும் இந்த சட்ட விவகாரத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லாத நிலையில், தணிக்கை அறிக்கைகளை கோருவதன் நோக்கம் என்ன? அந்த அறிக்கையின் உள்ளடக்கத்தை பகிரங்கப்படுத்தாதது ஏன்? என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இலங்கை அரசியலமைப்பின் படி கருத்துச் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாகும். தான் எதிர்கொண்ட அநீதிகள் குறித்தே தீபச்செல்வன் எழுதியுள்ளாரே தவிர, பயங்கரவாதத்தை அவர் ஊக்குவிக்கவில்லை. தமிழ் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டும் இலக்கு வைத்து தணிக்கை செய்வது பாரிய அச்சுறுத்தல் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தீபச்செல்வனின் கவிதைத் தொகுப்புகளை எவ்வித தணிக்கையுமின்றி உடனடியாக விடுவிக்குமாறும், படைப்பாளிகள் அச்சமின்றி எழுதுவதற்கான பாதுகாப்பான சூழலை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.