ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூடத்தில் கைதி ஒருவர் உயிர்மாய்ப்பு

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் சிறைக்கூடத்தில் 40 வயதுடைய ஆண் ஒருவர் தவறானமுடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மிச் நகர பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது

குறித்த நபரை கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 2400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஏறாவூர் பொலிசார் கைது செய்து 22ஆம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை இன்று 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அதற்கமைய அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று குறித்த நபருக்கு எதிரான வழக்கில் அவர் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு திறந்த நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார்.

திறந்த நீதிமன்ற நடவடிக்கை பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் குறித்த நபர் காலை 11.50 மணியளவில் சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்கு சென்று தவறானமுடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

இதனையடுத்து தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதவானின் அனுமதி பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த நபருக்கு எதிராக இரண்டு திருட்டுக்கள் தொடர்பாகவும் இரண்டு போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பாகவும் 4 வழக்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.