கடுவெலயில் ‘டுபாய் சுத்தா’ கைது!

சுற்றுலா விசாவை பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய் மற்றும் மோல்டோவா நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பிய டுபாய் சுத்தா என்ற ரன்தெடிகே நிஷாங்க பிரியதர்ஷன என்பவரை கடுவெல பகுதியில் வைத்து திங்கட்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் டுபாயில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பலரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளில், அவர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மோசடி செயல்களில் ஈடுபட்டதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.