மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் கைபேசியைத் திறந்து, அதிலுள்ள விபரங்களை ஆராய்வதற்காக அமெரிக்காவின் பிரதான புலனாய்வு அமைப்பான பெடரல் விசாரணைப் பணியகத்தின் உதவியை நாடியுள்ளதாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு செவ்வாய்க்கிழமை (26) கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
எஃப்.பி.ஐ அமைப்புக்கு இது குறித்து மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய, அவர்களிடமிருந்து கிடைக்கும் ஆலோசனைகளைத் தொடர்ந்து கைபேசி தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான நீதிவான் விசாரணை மற்றும் மரண பரிசோதனை சாட்சிப்பதிவுகள் ஐந்தாவது நாளாகவும் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மரண பரிசோதனைக்கான சாட்சியங்களை வழங்குவதற்காக இரு சாட்சிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
அவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக சாட்சியங்களைப்பதிவு செய்வதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன மற்றும் அவரது உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அவர்கள் இருவரும் தத்தமது நீதிமன்றப் பணிகள் காரணமாக நேற்றைய தினம் சாட்சியமளிக்கச் சமூகமளிக்கவில்லை எனத் தெரிவித்த அதிகாரிகள், அடுத்த சாட்சிப்பதிவு தினத்தில் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கட்டளையிட்டு, 19 மற்றும் 20ஆம் இலக்க சாட்சிகளான அவ்விருவருக்கும் உத்தியோகபூர்வ அழைப்பாணைகளை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
இதன்போது குறுக்கிட்ட நீதிவான், இந்த மரண விசாரணையில் இதுவரை 18 சாட்சிகளிடமிருந்து எந்தவித உத்தியோகபூர்வ அழைப்பாணைகளும் இன்றி, பொலிஸாரின் அறிவித்தலுக்கு அமைவாகவே சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அவ்வாறிருக்கையில், 19 மற்றும் 20ஆம் இலக்க சாட்சிகளுக்கு மாத்திரம் அழைப்பாணைகளை கோருவது ஏன் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், தமக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டால் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கத் தயாராக உள்ளதாக அச் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
இதனை ஏற்க மறுத்த நீதிவான், முந்தைய 18 சாட்சிகளைப் போன்றே இவர்களுக்கும் அதே நடைமுறையைப் பின்பற்றிச் சாட்சியமளிக்க அழைக்குமாறு உத்தரவிட்டதுடன், இரு சட்டத்தரணிகளுக்கும் அழைப்பாணை விடுக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விடுத்த கோரிக்கையை நிராகரித்தார்.
விசாரணையின் போது, கபில சந்திரசேனவுக்குப் பிணை வழங்குவதற்காகப் பிணையாளியாக முன்னின்றிருந்த இந்திக ரத்நாயக்க என்பவரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. அவர் தெரிவிக்கையில், எனக்குக் கபில சந்திரசேனவை சுமார் 9 அல்லது 10 வருடங்களாகத் தெரியும். கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் , எனக்குத் துல்லியமான திகதி நினைவில்லை . ஒரு நாள் அவர் எனக்குத் தொலைபேசியில் அழைத்து, ‘இந்திக எனக்கு ஒரு உதவி வேண்டும். எனக்கு நீ பிணையாளராக முன்னிலையாக வேண்டியிருக்கும்.
எனவே கிராம உத்தியோகத்தர் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைத் தயாராக வைத்திருக்குமாறு கூறினார். அவர்க்கூறியவாறே நான் ஆவணங்களைத் தயார் படுத்தியிருந்தேன். பின்னர், மே மாதம் 5ஆம் திகதி கபிலவுக்குப் பிணை கிடைத்துள்ளதைச் செய்திகளில் பார்த்துவிட்டு, அவரது சட்டத்தரணி உதாரவைத் தொடர்புகொண்டு நான் தயாராக உள்ளதைக் கூறினேன். அவர் என்னை நீதிமன்றத்துக்கு வருமாறு கூறினார். அதன்படி, நான் சென்று 100 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் கையெழுத்திட்டுவிட்டு வந்தேன்.
மே 7ஆம் திகதி அரவிந்த டி சில்வா என்பவர் அழைத்து, சட்டத்தரணியைச் சந்திக்கச் செல்ல வேண்டும் எனக்கூறி அவரது வீட்டிற்கு அழைத்தார். நான் அங்கு சென்றதும் அரவிந்த, அவரது மனைவி, சமில், சாந்த, பெர்டி மற்றும் நான் என அனைவரும் அரவிந்தவின் வாகனத்தில் சட்டத்தரணியைச் சந்திக்கச் சென்றோம். சந்திப்பு முடிந்து மீண்டும் அரவிந்தவின் காரில் அவரது வீட்டுக்குத் திரும்பிய போது, அங்கு இரவு உணவு தயாராக இருந்தது. கபில சந்திரசேனவும் அங்கு வந்து எங்களுடன் உணவு மேசையில் இணைந்துகொண்டார். உணவு அருந்திய பின்னர் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். மே 8ஆம் திகதி காலையில் கபில சந்திரசேன இறந்துவிட்டதாகச் செய்தியைப் பார்த்ததும், பதற்றமடைந்து அரவிந்தவுக்கு அழைத்து என்ன நடந்தது எனக் கேட்டேன். அதற்கு அவர், ‘இப்போது பேச முடியாது, பொலிஸார் வந்துள்ளனர், பிறகு அழைக்கிறேன்’ எனக் கூறினார்.”
இதன்போது நீதிவான் சாட்சியாளரிடம், “மார்ச் மாதமளவில் தனக்குப் பிணை வைக்க வேண்டும் என்று மரணமடைந்தவர் உங்களிடம் எவ்வாறு கூறினார்?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சாட்சியாளர், கபில சந்திரசேனவே நேரடியாகத் தன்னிடம் அதனைக் கூறியதாகக் குறிப்பிட்டார். மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிவான், “அவர் அதனை எந்த வழியில் தொலைபேசி மூலமா அல்லது நேடியாகவா உங்களுக்குத் தெரிவித்தார்?” எனக் கேட்டதற்கு, அது தனக்குத் துல்லியமாக நினைவில் இல்லை எனச் சாட்சியாளர் கூறினார். தொடர்ந்து நீதிவான், “அப்படியாயின், மரணமடைந்தவர் விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு முன்னரேயே தனக்குப் பிணை வைக்குமாறு உங்களிடம் கோரினாரா?” எனக் கேட்டதற்கு, “ஆம்” எனச் சாட்சியாளர் உறுதியாகப் பதிலளித்தார்.





