களனிவெளி புகையிரத மார்க்கத்தில் இலத்திரனியல் பயணச்சீட்டு கட்டமைப்பு செயலிழப்பு

களனிவெளி புகையிரத மார்க்கத்தில் ஏழு பிரதான புகையிரத நிலையங்களின் இலத்திரனியல் பயணச்சீட்டு வழங்கும் கட்டமைப்பு திடீரென செயலிழந்ததால், இன்று (21) வியாழக்கிழமை காலை கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த மூன்று அலுவலக புகையிரதங்களில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் இலத்திரனியல் பயணச்சீட்டுகள் ஏதுமின்றி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புகையிரத  நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

மஹரகம, நாவின்ன, பேஸ்லைன், நுகேகொடை, கோட்டை மற்றும் நாரஹேன்பிட்ட உள்ளிட்ட முக்கிய புகையிரத நிலையங்களிலேயே இந்த இலத்திரனியல் பயணச்சீட்டு வழங்கும் கட்டமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, காலை நேர அவசர அலுவலக வேளையில் கொழும்பு, கோட்டை நோக்கி பயணிப்பதற்காக புகையிரத நிலையங்களுக்கு வந்த பொதுமக்களுக்கு இலத்திரனியல் பயணச்சீட்டுகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பெரும் அசௌகரியங்களும் ஏற்பட்டுள்ளன.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியல் பயணச்சீட்டு கட்டமைப்புக்காக, இந்த புகையிரத நிலையங்களில் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்த பழைய அட்டை இலத்திரனியல் பயணச்சீட்டு நடைமுறை முற்றாக நீக்கப்பட்டிருந்தமையே இந்த நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகும்.

தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும் பட்சத்தில் பயணிகளுக்கு இலத்திரனியல் பயணச்சீட்டு வழங்குவதற்கான மாற்று வழிமுறைகள் எதுவும் அங்கு இல்லாததால், பயணிகள் இலத்திரனியல் பயணச்சீட்டு இன்றியே புகையிரதங்களில் ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று அலுவலக புகையிரதங்களில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் இவ்வாறு கட்டணமின்றி பயணித்ததால், புகையிரத திணைக்களத்திற்குப் பாரிய வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுமேத சோமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருமான இழப்பை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.