யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் மரதன்கடவல தோணிகல பகுதியில் கெப் வாகனம் மோதி யானை உயிரிழந்துள்ளதுடன், கெப்வண்டிக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அநுராதபுரம் மரதன்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.
மரதன்கடவல பொலிஸ் பிரிவின் தோணிகல பகுதியில் திங்கட்கிழமை (25) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கண்டியிலிருந்து வடபகுதிக்கு சென்ற கெப் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது டன் அச்சந்தர்ப்பத்தில் வவுனியா புளியங்குளம் மற்றும் பள்ளி வீதி உடுவில் பகுதியை வசிப்பிடமாக கொண்ட 24 வயதுடைய கெப்வண்டியின் சாரதியும் இன்னுமொரு இளைஞனும் சென்றுள்ளதுடன் அவர்களுக்கு எந்த ஆபத்துக்களும் இல்லையென்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
யானையின் மரணம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கெக்கிராவ, கனேவல்பொள வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கெக்கிராவ நீதிமன்றத்தில் விடயங்களை தெரிவித்ததன் பின்னர் யானையின் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் மரதன்கடவல பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




