சர்வதேச தேயிலை தினம் : ஹந்தானையில் டிஜிட்டல் வள மத்திய நிலையம் திறப்பு

சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு, கண்டி, ஹந்தானையில் உள்ள ரத்னசிறி விக்ரமநாயக்க தேசிய பயிற்சி நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்ட டிஜிட்டல் வள மத்திய நிலையம் (Digital Resource Center) வியாழக்கிழமை (21)  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கான நெதர்லாந்து பிரதித் தூதுவர் ஐவன் ரூட்ஜென்ஸ் இதனைத் திறந்து வைத்தார்.

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அதன் தலைவர்  நிமல் உடுகம்பொல உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த டிஜிட்டல் வசதி திறக்கப்பட்ட அதே வேளையில், உள்ளூர் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு  தொழில்நுட்பக் வழிகாட்டல்களும் அதற்கான உபகரணங்களும் கையளிக்கப்பட்டன.

மீளுற்பத்தி விவசாயச் சான்றிதழின் (Regen Agri Certificate) கீழ் பதிவு செய்யப்பட்ட உலகின் முதலாவது விவசாயக் குழுவாகப் புகழ்பெற்ற லும்பினி தேயிலை விவசாயக் குழுமம், அதிநவீன விவசாயக் கருவிகளை  இங்கு பெற்றுக்கொண்டது.

லும்பினி குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சமிந்த ஜயவர்தன சார்பாக, தரக் கட்டுப்பாட்டு அதிகாரி ரித்மி விராஜினி இந்த உபகரணங்களை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.