சஷி வீரவன்சவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு: சாட்சி விசாரணை ஜூலை 24 இற்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவுக்கு எதிரான, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டமை தொடர்பான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி முன்னெடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லியன் வருஷவிதான திங்கட்கிழமை (25) உத்தரவிட்டார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி போலி பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்குச் சமர்ப்பித்து, சட்டவிரோதமான முறையில் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டதாக சஷி வீரவன்சவுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஷி வீரவன்ச திங்கட்கிழமை (25) நீதிமன்றத்தில் முன்னிலைப்பட்டிருந்தார்.

இவ்வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் கணினி மூலம் உருவாக்கப்பட்டவை என்பதால், சான்றுச் சட்டத்தின் கீழ் அந்த கணினிக் கட்டமைப்பைப் பரிசோதிக்கத் தமக்கு அனுமதி வழங்குமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் கடந்த சாட்சி விசாரணையின் போது கோரியிருந்தனர். எனினும், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திங்கட்கிழமை (25) நீதிமன்றில் தெரிவிக்கையில், இந்த ஆவணங்கள் கணினியால் உருவாக்கப்பட்டவை அல்லவென்றும், அவை ஸ்கேன் செய்யப்பட்டு தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், பிரதிவாதி தரப்பின் கோரிக்கைக்கு அமைய கணினிக் கட்டமைப்பைப் பரிசோதிப்பதுக்கு வசதியாக, சான்றுச் சட்டத்தின் (விசேட ஏற்பாடுகள்) கீழ் அறிவித்தல் ஒன்று தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இது தொடர்பான சமர்ப்பிப்புகளை நகர்த்தல் பத்திரம் ஒன்றின் மூலம் சமர்ப்பிப்பதாக பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் குறிப்பிட்டதையடுத்து, நீதிவான் வழக்கினை ஜூலை 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.