சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கஜேந்திரகுமார் எம்பி நேரில் ஆராய்வு

தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும்,  யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வியாழக்கிழமை (28.05.2026) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள தேவைப்பாடுகள், குறைபாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் வைத்தியசாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, தங்கிச் சிகிச்சை பெறும் விடுதிகள், அவசர சிகிச்சைப் பிரிவு, பிரசவ விடுதி, விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.  வைத்தியசாலையில் பணியாற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் தாதியர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்து கொண்டார்.

ஆய்வினைத் தொடர்ந்து வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலில் வைத்தியசாலையின் தற்போதைய கட்டடத் தொகுதித் தேவைகள், விடுதிகளின் கொள்ளளவு பற்றாக்குறை மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களின் அவசியம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அவை எல்லாவற்றையும் விட மருத்துவர்கள், தாதிகள் மற்றும் ஏனைய சிற்றூழியர்கள் போன்றோரின் ஆளணிப் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் பணிச் சுமை, சேவைகளில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டன.

தென்மராட்சிப் பகுதி மக்களின் பிரதான மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் மேற்படி வைத்தியசாலையை அடுத்த கட்டத்துக்குத் தரம் உயர்த்துவதற்குத் தேவையான நீண்டகால அபிவிருத்தி வரைபடம் தொடர்பில் வைத்தியசாலை நலன்புரிச் சங்க உறுப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. குறிப்பாக யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகளின் வளப் பங்கீட்டின் போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பின்தங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டினர்.

கலந்துரையாடலின் நிறைவில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்துத் தெரிவிக்கையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தற்போதைய மனிதவளக் குறைபாடுகள் மற்றும் ஏனைய அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் விரைவாக நிவர்த்தி செய்யப்பட வேண்டியவை என்பதைத் தங்களின் கோரிக்கைகள் மூலம் முழுமையாக புரிந்து கொள்கின்றேன். இங்குள்ள தேவைகள் மற்றும் குறைபாடுகள் அனைத்தையும் அறிக்கையாகத் தொகுத்து எனக்கு சமர்ப்பியுங்கள். அதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதுடன் உரிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஊடாக இதற்கான தீர்வையும் பெற்றுத்தர முழுமையான அழுத்தங்களைப் பிரயோகிப்பேன் என உறுதியளித்தார்.