சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற போதே கோகுல்ராஜ் தெரிவானார்.
சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா.கிசோர் , உள்ளூராட்சி ஆணையாளரால் விடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளர் பதவியும் அவரது சபை உறுப்புரிமையும் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஆளுநரால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வறிதாக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், இன்றைய தினம் புதிய உப தவிசாளர் தெரிவுக்காக சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.
அதன் போது தமிழரசு கட்சியின் சார்பிலும், ஜனநாயக தமிழ்தேசிய கட்சி சார்பிலும் இருவர் போட்டியிட்டனர்.
அதில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டவருக்கு, தமிழரசு கட்சியின் 6 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.
ஜனநாயக தமிழ்தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டவருக்கு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 06 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கட்சியின் ஒரு உறுப்பனரும் வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும் வாக்களிப்பில் ஈடுபடாமல் நடுநிலை வகித்தனர். சாவகச்சேரி நகர சபையானது, 18 உறுப்பினர்களை கொண்ட சபையாகும்.
அதில் தமிழரசுக் கட்சியின் 06 உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் 06 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்கள், அதில் ஞா. கிசோரின் உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவரை உறுப்பினர் , தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்கள், அதில் ஒருவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அதன் அடிப்படையில் அவர்களில் இரு உறுப்பினர்கள். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினர் என சபையில் தற்போது 16 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் , உப தவிசாளர் தெரிவுக்கான கூட்டத்திற்கு , 16 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அதேவேளை குறித்த உப தவிசாளர் தெரிவினை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறு வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் முன்னாள் உப தவிசாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கையை மன்று நிராகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.





