மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அளித்த பதில் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:
மேகேதாட்டு அணை தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் அளித்த பதிலைத் தங்களது கனிவான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். அந்தப் பதிலில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே ஏதேனும் ஒரு கட்டமைப்பை அமைப்பதற்கு முன், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடக அரசு பெற வேண்டும் என்று பிப்.16 2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை’ என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பாக தற்போது நிலவும் சட்ட நிலையையும், ஏற்கெனவே நிலைபெற்றுள்ள சட்டக் கோட்பாடுகளையும் உரிய முறையில் கருத்தில் கொள்ளாமல், மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் இவ்வாறு ஏமாற்றமளிக்கும் பதிலை அளித்துள்ளதாகத் தோன்றுகிறது.
இந்தச் சூழலில், கர்நாடக மாநிலத்துக்கும் ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கும் இடையிலான ஆலமட்டி வழக்கில், கீழ்ப்படுகை மாநிலத்தின் ஒப்புதல் முற்றிலும் அவசியமானது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பை தங்களது கனிவான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
‘பிற அனைத்து கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலும், மத்திய அரசின் அனுமதியும் இன்றி, கர்நாடக மாநிலம் அந்த உயரம் வரை கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட முடியாது…’ என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
காவிரி நீர் விவகார நடுவர் மன்றத் தீர்ப்பைப் பொறுத்தவரையில், நடுவர் மன்றத் தீர்ப்பின் XVIII-ஆம் (18) பிரிவை உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக உறுதி செய்துள்ளது. அந்தப் பிரிவு, ஒவ்வொரு மாநிலமும் தனது எல்லைக்குள் நீரை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை, ‘நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு முரண்படாத வகையில்’ மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
எனவே, நடுவர் மன்றத் தீர்ப்பின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட நீரோட்ட முறையை பாதிக்கும் சாத்தியம் கொண்ட எந்தத் திட்டமும், அந்தத் தீர்ப்புடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதி செய்வதற்காக கட்டாயமாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
நடுவர் மன்றமே பல முக்கியமான வழிகாட்டு கோட்பாடுகளை வகுத்துள்ளது. கேரளத்தின் பாம்பாறு புனல்மின் திட்டத்தில் வெறும் 0.1 டி.எம்.சி அளவிலான நுகர்வு பயன்பாடு மட்டுமே இருந்த போதிலும், கீழ்ப்பகுதியில் உள்ள பாசனம் பாதிக்கப்படாத வகையில் நீர் வெளியீட்டு அட்டவணையை கேரளமும் தமிழகமும் இணைந்து ஒப்புக்கொள்ள வேண்டும் என நடுவர் மன்றம் உத்தரவிட்டது.
இதன் மூலம், ஆண்டு முழுவதற்கான மொத்த நீர் அளவுக்கு மட்டுமல்லாமல், கீழ்ப்படுகை மாநிலங்களின் நலன்களை பாதிக்கக்கூடிய நீர் வெளியீடுகளின் ஒருங்கிணைந்த ஒழுங்குபடுத்தலுக்கும் நடுவர் மன்றம் மிக உயர்ந்த முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது தெளிவாகிறது.
மேலும், நடுவர் மன்றத் தீர்ப்பின் XI-ஆம் (11) பிரிவு, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கிடையே பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டு, ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்படாத வரையில், கீழ்ப்படுகை மாநிலங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நீர் வழங்கலை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் மேல்படுகை மாநிலம் மேற்கொள்ளக் கூடாது என்று குறிப்பாகத் தடை செய்கிறது. அதேபோல், XX-ஆம் (20) பிரிவு, நடுவர் மன்றத் தீர்ப்பில் ஏதேனும் மாற்றம், திருத்தம் அல்லது மாற்றியமைப்பு செய்யப்பட வேண்டுமெனில், அது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்பந்தத்தின் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும் என்பதை அங்கீகரிக்கிறது.
எனவே, முன்மொழியப்பட்டுள்ள மேகேதாட்டு திட்டத்தை வெறும் ஒரு பொறியியல் திட்டமாக மட்டும் மதிப்பீடு செய்ய முடியாது என்பது தமிழகத்தின் தெளிவான மற்றும் பரிசீலிக்கப்பட்ட நிலைப்பாடாகும். அதன் சட்டபூர்வத்தன்மை முதலில் பின்வரும் அடிப்படைகளில் ஆய்வு செய்யப்பட வேண்டும்:
> காவிரி நீர்விவகார நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு.
> பிப்.16, 2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.
> கீழ்ப்படுகை மாநிலங்களின் உரிமைகள்; மற்றும் நடுவர் மன்றத் தீர்ப்புக்கும் நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களுக்கும் இணங்க திருத்தப்பட வேண்டும் என்பதற்காக, கர்நாடக அரசு 2019-ஆம் ஆண்டு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்தால் திருப்பி அனுப்பப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதுவே, நடுவர் மன்றத் தீர்ப்புடன் முழுமையான இணக்கம் காண்பது தவிர்க்க முடியாத முன்நிபந்தனை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
இந்நிலையில், மத்திய அரசு பின்வருவனவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்:
ஜூலை 27, 2026 அன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எண் 876-க்கு, மாநிலங்களுக்கு இடையிலான நீர் விவகாரங்களில் நடைமுறையிலுள்ள சட்டத்தையும், பொருந்தக்கூடிய சட்டக் கோட்பாடுகளையும் குறிப்பிடாமல், ஒன்றிய ஜல்சக்தித் துறை இணை அமைச்சர் அளித்த பதில் திரும்பப் பெறப்பட வேண்டும்.
மேலும், பின்வருவனவும் உறுதிசெய்யப்பட வேண்டும்:
> காவிரி நீர்விவகார நடுவர் மன்றத் தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் வெளிப்படையாகவும் நிரூபிக்கத்தக்க வகையிலும் இணங்குவதாக உறுதி செய்யப்படாத வரையில், மேகேதாட்டு திட்டத்துக்கு எந்தவிதமான சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கப்படக்கூடாது.
> நீரின் அளவு மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நீர் வெளியீட்டு முறை ஆகிய இரண்டிலும் கீழ்ப்படுகை மாநிலங்களின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
> எதிர்காலத்தில் இத்திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு பரிசீலனையும், அனைத்து கீழ்ப்படுகை மாநிலங்களின் பாதகங்களையும் கருத்தில் கொண்டு, முழுமையான தொழில்நுட்ப மற்றும் சட்ட ஆய்வுக்குப் பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும்.
காவிரி ஆறு ஒரு நீராதாரம் மட்டுமல்ல; தென்னிந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அது உயிர்நாடியாகும். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீரை ஒழுங்குபடுத்தும் அரசியலமைப்புச் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு, நடுவர் மன்றத் தீர்ப்பின் முழுமையையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் பாதுகாப்பது இன்றியமையாததாகும்.
நீதி, கூட்டாட்சிச் சுமூக நிலை மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின் உண்மையான அமலாக்கம் ஆகியவற்றின் பரந்த நலனைக் கருத்தில் கொண்டு, தங்களது கனிவான தலையீட்டை வேண்டுகிறேன் என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.





