சித்திரை புத்தாண்டு தினமான நேற்று செவ்வாய்க்கிழமை (14) நாட்டில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சேருநுவர, சோமாவதிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், மகிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய சகோதரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் நீராடிக் கொண்டிருந்த போதே இவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் கடற்படையின் உயிர்காப்புப் பிரிவினரும் சேருநுவர பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இதேவேளை, காலி – ஹபராதுவ கடற்கரையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை கடலில் நீராடிய போது இவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு கழுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் கட்டுநாயக்கவிலிருந்து சுற்றுலா வந்திருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.





