அம்பலாந்தோட்டை மாமடல பகுதியில் இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
நபர் ஒருவரை சுட்டுக் கொன்று, பின்னர் அவரது தலையை துண்டித்து தேவியின் சிலையில் வைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் சகோதரர் முன்னர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் 34 வயதுடைய ‘பொடி’ என அழைக்கப்படும் லக்மால் சந்தருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 11ஆம் திகதி இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், அன்றைய தினமே அவரது பிறந்தநாளாகவும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உயிரிழந்தவர் கடந்த பெப்ரவரி மாதம் மாமடல பகுதியில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபராக இருந்ததுடன், மார்ச் 30ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
‘மெத்த லொக்கு’ என அழைக்கப்படும் சலித உதயங்க மல்லிகாராச்சி, சமீர உதயங்க மற்றும் சாரங்க தர்ஷன ஆகியோர் இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை உயிரிழந்தவரின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார். சமீர உதயங்க சம்பவம் நடைபெற்ற தினமே கைது செய்யப்பட்ட நிலையில், மற்றைய இருவரும் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக உயிரிழந்தவரின் குழுவினரால் கொல்லப்பட்ட ‘மெத்த பொடி’ என்பவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ள ‘மெத்த லொக்கு’வின் மூத்த சகோதரர் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட பழிவாங்கும் உணர்வே இந்தக் கொலையின் பின்னணியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு வழங்கியதாக ஏற்பட்ட சந்தேகமே இந்த மோதல்களின் அடிப்படை காரணமாக இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் தலையை துண்டித்து சிலையில் வைக்கும் திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதற்குப் பின்னணியில் ‘கருணா லொக்கா’ என அழைக்கப்படும் ரஞ்சித் பிரியந்த எதிரிவீர இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கருணா லொக்கா, சம்பவம் நடந்த தினமே தமக்கு எதிரான பிடியாணை காரணமாக நீதிமன்றத்தில் சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது இந்தக் கொலை வழக்கிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் எனவும் பொலிஸார் கருதுகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.





