சி.டி விக்ரமரத்னவின் மரணத்தில் முறையான விசாரணை வேண்டும் – சமீர பெரேரா வலியுறுத்து

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் மரணத்தில் பாரிய சந்தேகம் காணப்படுவதால், இது குறித்து அரசாங்கம் உடனடியாக முறையான விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சி.டி விக்ரமரத்னவின் மரண செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலத்த சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. 17ஆம் திகதி பிற்பகல் 1.49 அளவில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, அவர் தனது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார். நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகித்த ஒரு அதிகாரியின் மரணம் சாதாரணமாக கடந்து போகக்கூடிய ஒன்றல்ல.

கடந்த காலங்களில் முக்கிய வழக்குகள் தொடர்பில் சாட்சியமளித்த கபில சந்திரசேன போன்ற நபர்கள் தற்கொலை என்ற முத்திரையின் கீழ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அந்த வரிசையில் சி.டி விக்ரமரத்னவின் மரணமும் ஆழமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மினின் மரபணு (டி.என்.ஏ.) அறிக்கைகளை போலித் தயாரிப்பு செய்யுமாறு அப்போதைய ஆட்சியின் உயர் பதவியில் இருந்த ஒருவரால் தனக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக சி.டி விக்ரமரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு மிகத் தீர்மானமிக்க சாட்சியமொன்றை வழங்கியிருந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.

அவர் சாட்சியமளித்து சில தினங்களிலேயே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதானது, முக்கிய வழக்குகளின் சாட்சியாளர்களை திட்டமிட்டு அகற்றும் சதித்திட்டமோ என்ற பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. சாட்சியாளர்களை அச்சுறுத்தவும், சான்றுகளை மூடிமறைக்கவும் நிழல் அரசாங்கம் முயல்கின்றதா என ஆராய வேண்டும்.

மறுபுறம், சில ஊடகங்கள் இந்தச் சம்பவம் நடந்த உடனேயே இது ஒரு தற்கொலை என அவசரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நடவடிக்கைகளே சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. எனவே, இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் உடனடியாக முழுமையான விசாரணைகளை நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றோம் என்றார்.