தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை அமுல்படுத்த வேண்டாம் !

தேசிய கல்விக் கொள்கை ஒன்றை முதலில் உருவாக்காமல் கல்வி மறுசீரமைப்புகளை அவசர அவசரமாக அமுல்படுத்த முயற்சிப்பது கல்வித் துறையை மேலும் குழப்பமடையச் செய்யும் நடவடிக்கையாகுமென அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வெல பன்னசேகர தேரர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

2026 ஜனவரி முதல் 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கான கல்வி மறுசீரமைப்புகளை அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் போதுமான கலந்துரையாடல்கள் நடத்தப்படவில்லை. பொதுவாக 1, 6 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான மாற்றங்கள் ஒன்றாக மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், 10 ஆம் வகுப்பு புறக்கணிக்கப்பட்டிருந்தது.

ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படாததுடன், தயாரிக்கப்பட்ட கற்றல் தொகுதிகளிலும் பல குறைபாடுகள் காணப்பட்டன. இதன் காரணமாக தொழிற்சங்கங்களும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அதன் விளைவாக 6 ஆம் வகுப்புக்கான திட்டம் மீளப் பெறப்பட்டது.

இதனையடுத்து பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைகள் திணைக்களம் மற்றும் தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் தேசிய செயற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. தற்போது 2026 மற்றும் 2027 ஆண்டுகளுக்கான கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு ஒரு மாத காலத்துக்குள் தேசிய கல்விக் கொள்கையை தயாரித்து சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார். உண்மையில் முதலில் தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கிய பின்னரே கல்வி மறுசீரமைப்புகள் அமுல்படுத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது கொள்கை இல்லாமல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்ட தடைகள் காரணமாக பாதிக்கப்பட்ட பரீட்சை அட்டவணைகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக 2026 ஆகஸ்ட் மாதத்தில் உயர்தரப் பரீட்சையும் டிசம்பர் மாதத்தில் சாதாரண தரப் பரீட்சையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் சில தனியார் வகுப்பு நடத்துநர்கள் பரீட்சைகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ள அட்டவணையை மாற்றாமல் அதேபடி நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்களின் கல்வியை வணிகமாக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது.

பாடசாலைகளில் தரமான கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் மாணவர்கள் தனியார் வகுப்புகளை நம்ப வேண்டிய அவசியம் ஏற்படாது. கல்வி மறுசீரமைப்புகள் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பெற்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.