தேவாலயங்களுக்கு வழிபடச் சென்ற அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது மனிதாபிமானமற்ற செயல். தேவாலயங்களுக்கு வழிபடச் சென்ற அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். இதை செய்த சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது,  ஊடகவியலாளர் ஒருவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரனும் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாடும் இதுவே. இத்தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள், பின்புலத்தில் உள்ள சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

அரசியலில் உள்ளவர்கள் முன்னர் இருந்தவர்கள் தொடர்ச்சியாக பதவியை தக்கவைப்பதற்கே முயற்சிப்பார்கள் என்றும் தெரிவித்த அவர், எது எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்