நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களைச் சேர்ந்த 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில், களு மற்றும் களனி ஆகிய பிரதான கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அவற்றின் தாழ்நிலப் பகுதிகளுக்குச் சிறு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பாதிப்புக்கள்
இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய 4 மாவட்டங்களே சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த மாவட்டங்களில் 20 பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதோடு, 123 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பகுதியில் 64 வயதுடைய ஒருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். தற்போது அமைக்கப்பட்டுள்ள 06 தற்காலிகப் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 87 குடும்பங்களைச் சேர்ந்த 359 பேர் தங்களது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மண்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள்
நிலவும் வரும் கடும் மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, குருவிட்ட, அயகம, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், களு கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத மற்றும் கிரிஎல்ல ஆகிய தாழ்நிலப் பகுதிகளுக்கும் , களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் ஹங்வெல்ல பகுதிக்குக் கீழ் அமைந்துள்ள சீதாவக்க, தொம்பே, பாதுக்க, ஹோமாகம, பியகம, கடுவெல, கொலன்னாவ, களனி, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய தாழ்நிலப் பகுதிகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிப்புக்கள்
சீரற்ற வானிலையால் நாட்டின் பல பகுதிகளில் வீதி மற்றும் புகையிரத போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட ரிவஸ்டன் வீதி தற்போது இலகு ரக வாகனங்களுக்கு மாத்திரம் திறக்கப்பட்டுள்ளது. கண்டி – தலாத்துஓயா வீதியின் உடதெல்தொட்ட பாலம் உள்வாங்கியுள்ளதால் அவ்வீதி மூடப்பட்டுள்ளதுடன், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் புகையிரதப் பாதையில் மன்னார் முதல் மதவாச்சி வரையிலும் , மலையகப் புகையிரதப் பாதையில் ரம்புக்கனை முதல் அம்பேவெல வரையிலும் புகையிரதப் போக்குவரத்துகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. புகையிரதங்கள் அம்பேவெல முதல் பதுளை வரை மாத்திரமே இயக்கப்படுகின்றன.
நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களான நுவரவௌ, உஸ்கல சியம்பலாங்கமுவ, மெடியாவ, நாலந்தா மற்றும் வேமெடில்ல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் அம்பாந்தோட்டை யோதவௌ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
காலநிலை முன்னறிவித்தல்
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் என்பதுடன், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரித்துக்காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இக்கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் 2 – 3 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால் கடல் நடவடிக்கைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், இடிமின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




