நீதிபதிகளின் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் நாட்டின் ஜனநாயகத்துக்கு விராேதமான செயலாகும். அதனால் அரசாங்கத்தின் ஜனநாயக விராேத நடவடிக்கைகளுக்கு எதிராக எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் கூட்டு எதிர்க்கட்சி நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொதுவாக ஒரு சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரும்போது, அதற்கான காரணங்களைக் கண்டறியும் ஒரு முறை உள்ளது. அதாவது, பொதுவாகக் கலந்தாலோசித்து, ஆலோசனைக் குழுக்களில் விவாதித்து, அதன் பிறகு அது தொடர்பான சமர்ப்பிப்புகளை சில அமைப்புகளிடம் இருந்தோ, அல்லது அரசியல் கட்சிகளிடம் இருந்தோ, அல்லது கொள்கை பிரகடன அறிக்கையிடமிருந்து பெற்று, அதன் உள்ளடக்கங்களின் அடிப்படையில்தான் பொதுவாக நாம் அரசியலமைப்புத் திருத்தங்களை நாட்டின் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருகிறோம்.
ஆனால் தற்போது அரசாங்கம் கொண்டுவர இருக்கும் இந்த சட்டமூலம் தொடர்பாக, பாராளுமன்றத்தில் பேசப்பட்டதா? பாராளுமன்றத்தில் 12 கட்சிகள் உள்ளன. எந்த அரசியல் கட்சியுடனும், இது தொடர்பில் கலந்துரையாடல் எதுவும் நடத்தப்படவில்லை. அத்துடன் நீதிபதிகளின் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் இதற்கு சம்பந்தப்பட்ட நீதிபதிகளுடன், நீதிபதிகளின் சங்கங்களுடன், அல்லது நீதி அமைச்சருடன் இது வரை எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.
அதேநேரம் தேசிய மக்கள் சக்தியில் ஒரு தலைமைச் சபை உள்ளது. அதில் ஒரு நிர்வாகச் சபை உள்ளது. தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் விடுதலை முன்னணி அல்ல. மக்கள் விடுதலை முன்னணியுடன் மேலும் பல பல்வேறு குழுக்கள் இணைந்துதான், தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கிறது.
அரசாங்கம் நீதிபதிகளின் வயதெல்லையை நீடிப்பதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் தலைமைச் சபை உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜயநாயக்க மிகவும் தெளிவாகக் கூறினார், அதாவது, இந்தத் திருத்தம் குறித்து எந்த விதத்திலும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைச் சபையிலோ அல்லது நிர்வாகக் குழுவிலோ, அல்லது வேறு எந்த இடத்திலும் எந்தவித விவாதமும் நடத்தப்படவில்லை என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
அப்படியானால் நீதிபதிகளின் வயதெல்லையை நீடிப்பதற்கு யாருக்கு தேவையாக இருந்தது? இதன் தயாரிப்பாளர்கள் யார்? யாருக்கு இந்த நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்கத் தேவை ஏற்பட்டது, அதன் உள்நோக்கம் என்ன? என கேட்கிறோம்.
நமது நாட்டை ஒரு சர்வாதிகார முறைக்கு, அல்லது ஒரு கட்சிக் ஆட்சி முறைக்கு ஒற்றைக் கட்சியின் ஆட்சியை நடத்தும் வேலைத்திட்டத்திற்குத்தான் கொண்டு செல்லப் பார்க்கிறார்கள். அதாவது தனக்கு எதிராக இருக்கும் எதிரிகள் அனைவரையும் ஒன்று சிறையில் அடைக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு சில ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட பிறகு அவர்களின் பிரஜா உரிமை பறிபோய்விடும். இந்த நிலைக்குத்தான் அரசாங்கம் நாட்டை கொண்டுசெல்ல முயற்சிக்கிறது.
எனவே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம். அதேநேரம் நாங்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வது, திருடர்களை பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் அதற்கு பயன்படுத்தப்படும் நீதிபதிகள் சுயாதீனமாக செயற்பட இடமளிக்கவேண்டும் என்றார்.



