இலங்கையில் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை அமைப்பான இலங்கை நீதிச்சேவை சங்கம் , நீதித்துறை உறுப்பினர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்த திட்டத்தை முற்றாக நிராகரித்துள்ளது.
இந்த முன்மொழிவு தேவையற்றது மட்டுமன்றி, நாட்டின் நீதித்துறை சுதந்திரம் மற்றும் நடுநிலைமைக்கு பாரதூரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கூறி, ஒன்பது முக்கிய காரணங்களை முன்வைத்து இச்சங்கம் தனது எதிர்ப்பை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அச்சங்கம் இவ்வாறு தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது, கீழ்மட்டங்களில் பணிபுரியும் தகுதியான இளம் நீதிபதிகளின் தொழில்முறை முன்னேற்றத்தைப் கடுமையாகப் பாதிக்கும் என சங்கம் எச்சரித்துள்ளது. இது நீதித்துறையின் இயல்பான மறுமலர்ச்சியைத் தடுத்து, பதவிகளில் தேக்கநிலையை உருவாக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய சூழலில் இவ்வாறானதொரு திருத்த அவசர அவசரமாகக் கொண்டுவரப்படுவதன் பின்னணியில் உள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் நோக்கங்கள் குறித்தும் நீதிச்சேவை சங்கம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதற்கமைய, நீதித்துறையின் சுயாதீனமான செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும் சாத்தியம், இளம் நீதிபதிகளின் பதவி உயர்வுகளில் தேக்கநிலை ஏற்படுதல், திருத்தச் சட்டமுறைகளில் தெளிவான அணுகுமுறை இல்லாமை, நீட்டிக்கப்பட்ட பதவிக் காலத்தைப் பெறும் நீதிபதிகள் மீது அரசியல் செல்வாக்கு செலுத்தப்படக்கூடிய அபாயம், சட்டரீதியான ஓய்வுபெறும் விதிகளில் மாற்றம் செய்வதால் ஏற்படும் பிற சிக்கல்கள், நீதித்துறை அமைப்பின் மீது மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மை பாதிக்கப்படல், நீதித்துறை சார்ந்த முக்கிய பங்குதாரர்களுடன் பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாமை, முன்மொழிவு கொண்டுவரப்படும் காலம் மற்றும் அதன் பின்னணியிலுள்ள நோக்கம் குறித்த கவலைகள், நீதிமன்றங்களின் வழக்குகளை நிர்வகிக்கும் திறன் மற்றும் ஒட்டுமொத்த செயல்பாடுகளில் ஏற்படக்கூடிய தொய்வு உள்ளிட்ட 9 முக்கிய காரணிகள் குறித்து அந்த சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.
குறுகிய கால நிர்வாக வசதிகளைக் கருத்தில் கொள்ளாமல், நீதித்துறையின் நீண்டகால நலன் மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சட்டவாக்காளர்களையும் அரசு அதிகாரிகளையும் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசியலமைப்பு ரீதியாக நீதித்துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் போது, சட்டச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும் விரிவான கலந்தாலோசனைகளை நடத்திய பிறகே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் அரச நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை உணர்வுபூர்வமான விவாதமாக உருவெடுத்துள்ள நிலையில், நீதித்துறையில் மறைமுகமாகத் தலையிடும் எந்தவொரு முயற்சியும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடும் விமர்சனங்களைச் சந்திக்கும். தங்களது கவலைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இத்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடரப்போவதாக இலங்கை நீதிச்சேவை சங்கம் உறுமியாக அறிவித்துள்ளது.



