தற்போதைய அரசாங்கம் நீதிமன்றங்களின் வெற்றிடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்புச் செய்து, நீதித்துறைக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளர், சட்டத்தரணி நளின் பத்திரன குற்றம் சுமத்தியுள்ளார்.
கட்சியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் தனக்குச் சாதகமான அதிகாரிகளையே குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் உயர் பதவிகளுக்கு நியமித்துள்ளது. மறுபுறம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் வெற்றிடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்புச் செய்து, பிரதம நீதியரசர் உள்ளிட்ட மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. மக்களின் கோரிக்கையாகவோ அல்லது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திலோ இல்லாத இந்த நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பு என்பது, நீதித்துறைக்கு வழங்கப்படும் ஒரு வகையான இலஞ்சமாகும். விசாரணை அதிகாரிகளும் அரசாங்கத்தின் தரப்பு, நீதிபதிகளும் அரசாங்கத்துக்குச் சாதகமானவர்கள் என்றால், நீதிமன்றத்தின் மூலம் நியாயமான தீர்ப்பை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு நீதிச் சேவைச் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்புக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்த கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி நெத்திக்குமார, மாற்று நடவடிக்கையாக ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்துக்குத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் என்பது பொதுவாக ஆரம்பகட்ட பயிற்சி பெறும் நீதிபதிகளுக்குரிய இடமாகும். எனவே இது ஒரு பழிவாங்கல் இடமாற்றமாகும்.
அரசாங்கத்தின் கருத்துக்கு முரணாகச் செயல்படும் நீதிபதிகளுக்கு இவ்வாறான தண்டனை இடமாற்றங்கள், வெளிநாட்டுப் பயணத்தடைகள் மற்றும் சம்பளக் குறைப்பு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி பதவிக் கால நீடிப்புக்கு இணக்கமாக இருந்ததாகக் கூறப்பட்டாலும், நீதிச் சேவைச் சங்கம் அதனை ஏகமனதாக நிராகரித்ததால் அவருக்குப் பதவி விலக நேரிட்டது. சாட்சியாளர்கள் அச்சமடையும், காணாமல் போகும் மற்றும் கொலை செய்யப்படும் ஒரு சூழலில், அரசாங்கத்தினால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாக்க முடியாது என்றார்.





