பருத்தித்துறை மீனவர் ஒருவரை இந்திய மீனவர்கள் கடத்திச் சென்று, கைகால்களைக் கட்டி சித்திரவதை செய்த செயலானது பாரிய சர்வதேச மனித உரிமை மீறலாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பாலைமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“தொப்புள் கொடி உறவு என்று பேசிக்கொண்டு, ஒரே மொழியைப் பேசும் சக மீனவரை இந்திய நாகபட்டின மீனவர்கள் கடத்திச் சென்று, கைகால்களைக் கட்டித் தங்கள் நாட்டுத் துறைமுகத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது ஒரு வெறித்தனமான குற்றச்செயல்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இலங்கை மீனவர்கள் தாக்கப்படும்போது மௌனம் காப்பது வேதனையளிக்கிறது.
பாதிக்கப்பட்ட மீனவரை உடனடியாக இலங்கைத் தூதரகம் ஊடாக மீட்க வேண்டும் என்பதுடன், அவருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தாக்குதல் நடத்திய நாகபட்டின மீனவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
மீனவர் முரண்பாடுகளைத் தீர்க்க முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த திட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “கடல் எல்லைக்குள் பழைய புகையிரதப் பெட்டிகள் மற்றும் பேருந்துகளை இறக்கும் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்தார்.
இதனை முழுமையாகச் செயல்படுத்தியிருந்தால் இந்திய இழுவை மடி படகுகள் எங்கள் எல்லைக்குள் வருவதைத் தடுத்திருக்க முடியும். தற்போதைய அமைச்சர் சந்திரசேகரன் இத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
வடகிழக்குத் தமிழ் அரசியல் தலைமைகளைச் சாடிய ராஜ்குமார், “தமிழ் மக்கள் துன்பப்படும்போது கண்டனக் குரல் எழுப்பாமல் தமிழ் தலைமைகள் மௌனமாக இருப்பது ஏன்? ‘நக்குண்டார் நாவிழந்தார்’ என்ற பழமொழிக்கேற்ப, இந்திய அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்காக இவர்கள் அமைதி காக்கிறார்களா? அண்மையில் செட்டிபாளையத்தில் மீனவர் ஒருவர் கடற்படையினரால் சித்திரவதை செய்யப்பட்டபோதும் இவர்கள் குரல் கொடுக்கவில்லை.
ஆனால், நாம் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று நீதி பெற்றுக்கொடுத்தோம்” என்று சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு, இந்தியாவிலுள்ள இலங்கை மீனவரைப் பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.




