தேசிய மக்கள் சக்திக்கான சிறுபான்மையினத்தவரின் ஆதரவு என்பது இதுவரை சிறுபான்மையின அரசியலை வடிவமைத்த அவர்களது நீண்டகாலக் கோரிக்கைகளான மனித உரிமைகள், நீதி மற்றும் அரசியல் சுயாட்சி என்பவற்றிலிருந்து விலகிச் செல்வதற்கு சமமானதா? என ‘சர்வதேச சிறுபான்மையினக்குழு’ எனும் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
அதேவேளை இலங்கையின் சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அவசியமான மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்துடன் கூடிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க வாய்ப்பு தேசிய மக்கள் சக்தி வசமிருப்பதாகவும், அதனை உருவாக்கும் வரை அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் சீர்குலைந்துவரும் சிறுபான்மையின அரசியல் போக்கு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின்கீழ் ‘சர்வதேச சிறுபான்மையினக்குழு’ எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 50 பக்க ஆய்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கை அரசியலின் மிகமுக்கியமானதொரு காலகட்டத்தில் இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது. சிறுபான்மையினத்தவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் மாற்றத்தை முன்னிறுத்தி, சமத்துவத்தைக் கட்டியெழுப்பல் மற்றும் ஒடுக்குமுறைகளை இல்லாதொழித்தல் ஆகிய வாக்குறுதிகளை அளித்த கட்சியொன்றை வாக்களித்துத் தெரிவுசெய்துள்ளனர். நாட்டின் பெரும்பான்மையின மக்களைப்போல அவர்களும் ஊழலை முடிவுக்குக்கொண்டுவரல், அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் பின்னரான பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்பவற்றையே கோருகின்றனர். அவற்றை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பேரினவாதப்போக்கையும் முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்தது. இருப்பினும் தேசிய மக்கள் சக்திக்கான சிறுபான்மையினத்தவரின் ஆதரவு என்பது அவர்கள் இதுவரை முன்னுரிமை அளித்துவந்த விடயங்களில் ஏற்படும் மாற்றத்துக்கு சமமானதா? இதுவரை சிறுபான்மையின அரசியலை வடிவமைத்த அவர்களது நீண்டகாலக் கோரிக்கைகளான மனித உரிமைகள், நீதி மற்றும் அரசியல் சுயாட்சி என்பவற்றிலிருந்து விலகிச் செல்வதற்கு சமமானதா? என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும் இலங்கை சுதந்திரமடைந்திலிருந்து நாம் அறிந்த சிறுபான்மையின அரசியல் பிரதிநிதித்துவம் இப்போது வெகுவாக மாற்றமடைந்துள்ளது. பழைய தேசிய அரசியல் கட்சிகள் தம்மைத்தாமே நிலைமாற்றத்துக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அச்செயன்முறையின்போது மிகப்பொருத்தமான சிறுபான்மையின அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான வாய்ப்புக்கள் உருவாகும்.
நீண்டகாலமாகப் பழக்கப்பட்ட முகங்களுடன் நாட்டிலுள்ள சிறுபான்மையினங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் அண்மையகாலங்களில் அவற்றுக்கான அங்கீகாரத்தைப் பெருமளவுக்கு இழந்துவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றியினால் ஏற்பட்ட விளைவுகள் நிரந்தரமில்லாத போதிலும், அவ்விளைவுகள் சிறுபான்மையின அரசியல் கட்சிகள் தாம் செய்யத்தவறிய விடயங்களை சுயபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்தைத் தோற்றுவித்துள்ளன. இவ்வேளையில் சிறுபான்மையினக்கட்சிகள் நாட்டின் அரசியலில் தமது வகிபாகம் என்னவென்பதை மீளாய்வுக்கு உட்படுத்தவேண்டும். அத்தோடு பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவேண்டியது மிக அவசியமாகும்.
தற்போது தேசிய மக்கள் சக்தியிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலம் இருக்கின்றது. அதனைப் பயன்படுத்தி இலங்கையின் சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க வாய்ப்பு அதன்வசம் உள்ளது. அதேபோன்று நீண்டகால வரலாற்றைக்கொண்ட உரிமைகள் மற்றும் நீதிக்கான கோரிக்கைகளுக்கும், மூன்று தசாப்தகால மோதலுக்கு வித்திட்ட அடிப்படைக்காரணங்களுக்கும் தீர்வு காண்பதே சகல கட்சிகளினதும் முன்னுரிமைக்குரிய இலக்காக இருக்கவேண்டும். அதன்படி புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.




